

இராக்கில் ஐஎஸ் சரிந்து வருவதாகவும், இராக்கில் 7% பகுதிகள் மட்டுமே ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இராக் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "இராக்கில் ஐஎஸ் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்னர் இராக்கில் 40% பகுதிகள் ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால் தற்போது 7% பகுதிகள் மட்டுமே ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ளன" என்றார்.
முன்னதாக ஐஎஸ்ஸிடமிருந்து மோசூல் நகரை கைப்பற்ற அந்த நாட்டு அரசுப் படைகள் தீவிரமாகப் போரிட்டு வருகின்றன. இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடைபெறுவதால் அந்த நகரில் இருந்து சுமார் 2 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
கடந்த 2014 ஜூனில் மோசூல் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். அந்நகரை மீட்க, கடந்த 2016 அக்டோபரில் மிகப்பெரிய போர் தொடுக்கப்பட்டது. கடந்த 6 மாத போருக்குப் பிறகு மேற்கு மோசூல் பகுதியை அரசுப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளன.
அமெரிக்க கூட்டுப் படைகளின் ஆதரவுடன் இராக் அரசுப் படை தொடர்ந்து முன்னேறி வருகிறது. இருதரப்புக்கும் இடையே கடும் சண்டை நடைபெறுகிறது. இதனால் மோசூல் நகரில் இருந்து சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த பிப்ரவரி 28-ம் தேதி மட்டும் 17 ஆயிரம் பேரும் மார்ச் 3-ம் தேதி 13 ஆயிரம் பேரும் மோசூலை விட்டு வெளியேறினர்.