

ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் கைப்பந்தாட்டப் போட்டியின்போது நடத்தப்பட்ட பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி 45 பேர் பலியாகினர். மேலும் 60 பேர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பதியில் உள்ள பக்திகா மாகணத்தின் யா கேல் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று (ஞாயிறு) மாலை கைப்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது.
அப்போது ரசிகர்கள் கூட்டத்தில் இருந்த தற்கொலைப்படையை சேர்ந்த நபர் தன்னை வெடிக்க செய்தார். இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 45 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், மேலும் 60 பேர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. .
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து விளையாட்டு மைதானத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்ட நேட்டோ படைகள் இந்த ஆண்டு இறுதியோடு அங்கிருந்து வெளியேறுகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று 12,000 நேட்டோ வீரர்கள் வெளியேறிய சில மணி நேரத்தில் இந்த சதி சம்பவம் நடந்தது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பு பொறுப்பேற்கவில்லை.