Last Updated : 06 Dec, 2013 07:15 PM

 

Published : 06 Dec 2013 07:15 PM
Last Updated : 06 Dec 2013 07:15 PM

ட்விட்டரில் நெல்சன் மண்டேலாவுக்கு நினைவாஞ்சலி

ட்விட்டர் வெளியில் இன்னமும் இரங்கல் நதி பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் ஒவ்வொரு துளியும் மண்டேலாவின் நினைவைப் போற்றுகிறது.

அந்த மாமனிதரின் வாழ்க்கையையும், அது ஏற்படுத்திய தாக்கத்தையும் ட்விட்டரில் நொடிக்கு நூறாக பதிவாகிவரும் இரங்கல் குறும்பதிவுகள் உணர்த்திக்கொண்டிருக்கின்றன.

மண்டேலாவின் ஆன்மா சாந்தியடையட்டும் எனும் பொருள்படும் வகையிலான ஹாஷ்டேகான ஆர்.ஐ.பி. (#RIPNelsonMandela) தான் ட்விட்டரில் நாள் முழுவதும் முழுவதும் பிரபலமாக இருக்கிறது. #மண்டேலா உள்ளிட்ட ஹாஹ்டேகுடன் வெளியான குறும்பதிவுகளும் மண்டேலா எனும் தலைவரை பற்றி சொல்லிக்கொண்டிருக்கின்றன.

தென் ஆப்பரிக்காவில் நிறவெறியை முடிவுக்குக் கொண்டுவந்த மகத்தான மாற்றத்துக்கு வழி வகுத்த நெல்சன் மண்டேலா மறைந்த செய்தி கேட்டதுமே உலகத் தலைவர்களும் மற்றத் துறைகளை சேர்ந்த பிரபலங்களும் தங்கள் சோகத்தையும், தங்கள் மீதான அவரது தாக்கத்தையும் பகிர்ந்து கொள்ளத் துவங்கினர்.

'உலகின் போராளிகளில் ஒன்று மறைந்தது. நெல்சன் மண்டேலா நம் காலத்து நாயகன்': உலகத் தலைவர்களில் முதல் நபராக பிரிட்டன் பிரதமர் டேவிட கேமரூன் மண்டேலா மறைவு தொடர்பான தமது இரங்கலை இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, ஒரு கணம் நின்று யோசித்து, மண்டேலா எனும் மனிதர் வாழ்ந்தார் எனும் தகவலுக்கே நன்றி தெரிவிக்க வேண்டும் என்று குறும்பதிவிட்டார். வெள்ளை மாளிகை ட்விட்டர் முகவரியில் இருந்து வெளியான இந்த குறும்பதிவு 3,000 முறைகளுக்கு மேல் ரீடிவீட் செய்யப்பட்டது.

கனடா பிரதமர் ஹார்பர், ஒட்டுமொத்த கனடாவும் மண்டேலா குடும்பம் மற்றும் தென்னாப்பிரிக்க மக்களுடன் இணைந்து துக்கம் அனுஷ்டிக்கிறது என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

மன்மோகனின் ட்வீட்டாஞ்சலி

'மனிதர்களின் மகத்தானவர் மறைந்துவிட்டார். இது தென்னாப்பிரிக்கா போலவே இந்தியாவுக்கும் இழப்பு தான். உண்மையான காந்தியவாதி அவர்' என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தார். முதல் சில மணி நேரங்களிலேயே இந்தக் குறும்பதிவு 800 முறைக்கு மேல் ரீடிவீட்டனது.

உலகத் தலைவர்கள் மட்டும் அல்ல, ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்களும் மண்டேலாவுக்கு புகழாஞ்சலில் தெரிவித்தனர்.

ஹாலிவுட் நடிகரும் முன்னாள் கலிபோர்னியா கவர்னருமான அர்னால்டு ஸ்வாஸ்நேகர், மடிபாவின் (மண்டேலாவின் இனக்குழு பெயர்) வாழ்க்கை கடவுள் இருப்பதற்கான நிருபனத்திற்கு மிகவும் அருகாமையிலானது என தெரிவித்திருந்தார்.

தனது ஆன்மாவின் அடியாழத்தில் இருந்து வேதனை கொள்வதாக நடிகை சார்லைஸ் தீரான் கூறியிருந்தார்.

கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டினா ரொனால்டோ 'மண்டேலா உங்கள் வாழ்க்கை மற்றும் முன்னுதாரணத்துக்கு நன்றி. நீங்கள் எப்போதும் எங்களுடன் இருப்பீர்கள்' என குறும்பதிவிட்டார்.

புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குனரான மைக்கேல் மூர், 'மண்டேலாவால் சிறையில் இருந்து வெளியே வர முடியாது என நினைத்தேன். ஆனால் அவர் விடுதலையாகி அதிபராகவும் ஆன பிறகு எதுவும் முடியும் என நம்புகிறேன்' என தெரிவித்திருந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரைன் லாரா, 'விளையாட்டுக்கு உலகை மாற்றும் சக்தி இருக்கிறது எனும் மண்டேலா மொழியை குறிப்பிட்டு அவரை நினைவு கூர்ந்தார்.

தென்னாப்பிரிக்க வீராரான டிவில்லியர்ஸ், 'முன் எப்போதையும் விட ஒரு தேசமாக இப்போது ஒன்று பட்டு நிற்போம். அவருக்கு நாம் கடன்பட்டிருக்கிறோம். மண்டேலா உங்களை இழந்து தவிக்கிறோம்' என உருக்கமாக கூறியிருந்தார்.

மேலும் பல கிரிக்கெட் நட்சத்திரங்களும் மண்டேலா நினைவை போற்றும் வகையில் குறும்பதிவிட்டனர்.

ட்விட்டரும் தன் பங்கிறகு மண்டேலா சிறையில் இருந்து வெளியானபோது கை முஷ்டியை உயர்த்தியிருந்த கருப்பு வெள்ளை புகைப்படத்தை வெளியிட்டு அந்த மகத்தான தலைவருக்கு அஞ்சலில் செலுத்தியது.

ட்விட்டர் பயனாளிகள் பலரும் மண்டேலா மறைவின் சோகத்தை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்க வரலாற்றின் இனவெறி எனும் இருண்ட யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்த மண்டேலாவின் புகழ் டவிட்டர் வெளியில் குறும்பதிவுகளால் மின்னிக்கொண்டிருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x