

என்டிலேகா என்பவர் தனது முகநூலில், “இனி நான் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ஏஎன்சி) கட்சிக்கு வாக்களிக்க மாட்டேன்” என்று சமீபத்தில் குறிப்பிட்டது தென்னாப்பிரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம் அவர் அந்தக் கட்சியை நிறுவிய நெல்சன் மண்டேலாவின் மூத்த பேத்தி. அரசியலில் தனக்குள்ள ஆர்வத்தை அடிக்கடி வெளிப் படுத்தும் பழக்கம் உள்ளவர். மண்டேலாவால் தொடங்கப்பட்ட ஏஎன்சி, இனவெறிக்கு எதிராக கடுமையாகப் போரிட்ட கட்சி.
ஆனால் 2013-ல் மண்டேலா இறந்த பிறகு இந்தக் கட்சி கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. ஏஎன்சி கட்சியைச் சேர்ந்த அந்நாட்டு அதிபர் ஜேக்கப் ஜுமாவின் ஆட்சிக் காலத்தில் ஊழல் மலிந்து வருகிறது. வேலையின்மை 27 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு பசி, பட்டினி காரணமாக அரசின் பாதுகாப்பிலிருந்த 94 மனநல நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் அதிபர் ஜுமா, அரசு நிதியைப் பயன்படுத்தி தனது வீட்டை எக்கச்சக்கமான செலவில் புதுப்பித்திருக்கிறார்.
இந்தப் பின்னணியில்தான் மண்டேலாவின் பேத்தி தனது கருத்தை இப்படி வெளிப்படுத்தி யிருக்கிறார். இதற்கு எதிராக மண்டேலாவின் பேரனான நடாபா என்பவர், “அன்புள்ள அக்கா, நம் தாத்தா ANC கட்சிக்கு ஆதரவாக இருந்திருக்கும்போது நாமும் அப்படித்தானே இருக்க வேண்டும்” என்று தன் பங்குக்கு கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். உடனே, “நம்முடைய மனசாட்சிப்படிதான் நடந்து கொள்ள வேண்டும் என்றுதான் தாத்தா தொடர்ந்து கூறி வந்திருக்கிறார்” என்று தனது கருத்தைப் பதிவிட்டிருக்கிறார் என்டிலேகா.
வரும் தேர்தலில் எதிர்க் கட்சியில் சேர்ந்து போட்டியிடு வீர்களா என்ற கேள்விக்கு “ஏன் கூடாது? மண்டேலா என்ற அழுத்தமான குடும்பப் பெயர் இருப்பதால் என் குரலுக்கு ஒரு மதிப்பு இருக்கத்தான் செய்யும். என் தாத்தா இருந்திருந்தால் இதைக் கண்டு நிச்சயம் பெருமைப்பட்டிருப்பார்” என் கிறார் அவர்.
காலம் பல விந்தையான மாற்றங்களைச் செய்து வருகிறது என்பதும் அதற்கு காங்கிரஸ் என்று முடியும் கட்சிகளே எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன என்பதும் விநோதம்தான்.