

விசா விதிமீறல் வழக்கு தொடர்பாக நியூயார்க் நகர நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் இன்ஃபோசிஸ் நிறுவனம் 10 லட்சம் டாலர் (ரூ. 6.4 கோடி) அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நகர நிர்வாகமும், இன்ஃபோசிஸ் நிறுவனமும் சமரசமாக தீர்த்துக் கொள்ள முன்வந்ததைத் தொடர்ந்து இந்தத் தொகையை இன்ஃபோசிஸ் நிறுவனம் செலுத்த உள்ளது.
ஆனால் விதிமீறல் எதுவும் செய்யவில்லை என்றும் விண்ணப்ப படிவம் உள்ளிட்ட ஆவணங்கள் தாக்கலில் தவறு நிகழ்ந்திருக்கலாம் என்று இன்ஃபோசிஸ் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக நியூயார்க் நகர அட்டர்னி ஜெனரல் எரிக் டி ஷ்னெய்டர்மேன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விசா விதிமீறல் தொடர்பான விசாரணையை முடித்துக் கொள்வதாகவும் இந்த வழக்கை சமரசமாக தீர்த்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே பெங்களூரில் அமைந்துள்ள அந்நிறுவன தலைமையகம் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்: 2010-11-ம் ஆண்டில் நிறுவனம் செலுத்திய வரி தொடர்பான விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. எவ்வித குற்ற நடவடிக்கை மற்றும் சிவில் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படாமல் இந்த விவகாரம் தீர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த விசாரணையானது நிறுவனங்கள் தாக்கல் செய்த ஆவணங்கள் சம்பந்தப்பட்டது. இதில் எவ்வித தவறையும் நிறுவனம் செய்யவில்லை. இது தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமரசத் தீர்வானது அனைத்து சட்ட ரீதியான நடைமுறைப்படி மேற்கொள்ளப்பட்டதாகும். 2013-ம் ஆண்டு அமெரிக்க நீதித்துறை கொண்டு வந்த சமரச தீர்வின் அடிப்படையில் இது ஏற்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் தவிர்க்க ஒப்புக் கொண்டு குறிப்பிட்ட தொகை அளிப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் நியூயார்க் அட்டர்னி ஜெனரல் எரிக் வெளியிட்ட அறிக்கையில், இன்ஃபோசிஸ் நிறுவனம் நூற்றுக்கணக்கான பணியாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தவறிவிட்டது. அதேசமயம் முறைப்படி செலுத்த வேண்டிய வரியையும் செலுத்தவில்லை. தொடர்ந்து அமெரிக்க விசா விதிகளை மீறி நியூயார்க் மாகாணத்தில் வெளிப்பணி ஒப்படைப்பு அலுவலகத்தில் பணியமர்த்தி வேலை வாங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நியூயார்க் நகருக்கு வெளிப்பணி ஒப்படைப்பு விசா மூலம் அழைத்து வரும் இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடர்ந்து பணியாளர் விசா விதிகளை மீறியதாகக் குறிப்பிட்டார்.
நியூயார்க் நகர மக்களுக்கு வேலை வாய்ப்பை பறிகொடுத்துவிட்டு வெளிநாட்டு பணியாளர்கள் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்க முடியாது என்றும், நியூயார்க் மாகாண தொழிலாளர் துறை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவதாகக் குறிப்பிட்டார்
வெளிநாட்டு பணியாளர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுவதாகவும், ஊதிய விகிதப்படி வரி செலுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.