

உலகப் புகழ்பெற்ற ஏல நிறுவனம் 'சதபைஸ்'. இங்கிலாந்தைச் சேர்ந்த இந்நிறுவனத்தில் இந்தியாவின் பாரம்பரியப் பெருமை கொண்ட பொருட்கள் கடந்த புதன்கிழமை ஏலம் விடப்பட்டன.
இந்தியப் பொருட்கள் என்பதால் உலகின் பல பகுதிகளிலிருந்தும் பலர் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். இதில் என்ன சுவாரசியம் என்றால், வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு வைத்துக்கொள்ள தாத்தாக்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பெட்டி 6,62,500 பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கு (இந்திய மதிப்பில் ரூ.6.44 கோடி) ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. அது வைரக்கற்கள் பதித்து தங்க முலாம் பூசப்பட்ட பெட்டி. அனேகமாக 17 அல்லது 18ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
குஜராத்தியர் அல்லது தென்மாநிலத்தவர் பயன்படுத்தியதாக இருக்கலாம் என்கிறார்கள். தகதகவென ஜொலிக்கும் இந்த வெற்றிலைப் பெட்டி ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை மட்டுமே ஏலத்தில் போகும் என்று எதிர்பார்த்தார்களாம். அதைவிட பல மடங்கு அதிக தொகைக்கு போயிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. திப்பு சுல்தானின் வாள் உள்பட 11 பொருட்கள் ரூ.3.80 கோடிக்கு ஏலம்போயிருக்கிறது.