உலக மசாலா: அற்புதமான தம்பதி!

உலக மசாலா: அற்புதமான தம்பதி!
Updated on
1 min read

இங்கிலாந்தில் வசிக்கும் 87 வயது பீட்ரிஸ் கடந்த 6 ஆண்டுகளாக எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, தான் மரணத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் இனிமேல் மருத்துவம் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். தினமும் இவரைப் பார்ப்பதற்காக 90 வயது கணவர் பெர்ட் ஒயிட்ஹெட் சக்கர நாற்காலி மூலம் மருத்துவமனைக்கு வருவார். திடீரென்று பெர்ட்டுக்கு உடல் நலம் குன்றி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரின் விருப்பப்படி மனைவிக்குப் பக்கத்திலேயே படுக்கை ஒதுக்கப்பட்டது. அதைப் பார்த்தவுடன் வலியால் துடித்துக்கொண்டிருந்த பீட்ரிஸின் முகம் சந்தோஷமானது. “என் அம்மா சில நாட்கள்தான் வாழப் போகிறார். எங்கள் விருப்பப்படியே ராயல் போட்டன் மருத்துவமனை அம்மா அருகில் அப்பாவை அனுமதித்திருக்கிறது. 15 வயதில் அம்மா, அப்பாவைச் சந்தித்தார். நட்பு காதலானது. 20 வயதில் திருமணம். 4 குழந்தைகள். பேரன், பேத்திகளுக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றனர். 67 ஆண்டுகள் அழகாக வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள். இவர்களைப் பார்த்துதான் நாங்களும் வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டோம். புற்றுநோய் வந்த பிறகுதான் அம்மா துன்பத்தை அனுபவிக்க ஆரம்பித்தார். அது அப்பாவை மிகவும் பாதித்தது. இவர்கள் இருவரின் அன்பும் புரிதலும்தான் இவ்வளவு தூரம் வாழ்நாளை நீட்டித்து வைத்திருந்தது. இப்படி ஒரு பெற்றோருக்கு மகளாகப் பிறந்ததை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். மரணம்தான் இருவரையும் முதல்முறையாகப் பிரிக்கப் போகிறது என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது” என்கிறார் சூஸன்.

அற்புதமான தம்பதி!

பிரேசிலில் வசிக்கும் 24 வயது மரியானா மென்டஸுக்குப் பிறக்கும்போதே முகத்தில் பெரிய மச்சம் இருந்தது. வலது கண், மூக்கு, வலது கன்னம் வரை பரவியிருக்கும் மச்சைத்தைக் கண்டு பயந்துபோன இவரது அம்மா, 5 வயதில் 3 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். மச்சத்தின் தன்மையைக் கொஞ்சம் குறைக்க முடிந்ததே தவிர, முற்றிலும் நீக்க முடியவில்லை. “என் மச்சத்தைப் பார்த்துக் கிண்டல் செய்திருக்கிறார்கள். அசிங்கமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் அவை எல்லாம் என்னைப் பாதிக்கவே இல்லை. மற்றவர்களைப் போல இல்லாமல், நான் தனித்துவமாகத் தெரிகிறேன் என்ற எண்ணம் எனக்குச் சின்ன வயதிலேயே வந்துவிட்டது. நிறையப் பேர் என்னை அன்போடு அரவணைத்திருக்கிறார்கள். எனக்கு விவரம் தெரியாத வயதில் அம்மா அறுவை சிகிச்சை செய்துவிட்டார். இல்லையென்றால் நான் அதைச் செய்திருக்க மாட்டேன். என்னிடம் இரண்டு வாய்ப்புகள் இருந்தன. கிண்டல் செய்கிறார்களே என்று கவலைப்பட்டுக்கொண்டு என்னை நானே அழித்துக்கொள்வது. கிண்டலைப் புறக்கணித்து வாழ்க்கையில் முன்னேறிக் காட்டுவது. நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தேன். இதோ இன்று பிரேசிலின் முக்கியமான மாடலாக மாறிவிட்டேன். எந்தச் சூழ்நிலையிலும் மச்சத்தை மறைத்து, ஒப்பனை செய்துகொள்ள நான் அனுமதிப்பதில்லை. இன்று யாரும் என் மச்சத்தைக் குறை சொல்வதில்லை” என்கிறார் மரியானா.

ரோல் மாடல்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in