Published : 03 Jun 2017 09:31 AM
Last Updated : 03 Jun 2017 09:31 AM

உலக மசாலா: பாதசாரிகளுக்கு நம் ஊர்களில் இடமே இல்லை!

தென் கொரிய தலைநகர் சியோலில் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை இணைக்கும் விதத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மிக நீண்ட பாலம் இயங்கிவந்தது. சியோல் ஸ்டேஷன் என்று அழைக்கப்பட்ட இந்தப் பாலம், தென் கொரியாவின் முக்கிய அடையாளமாகவும் பொருளாதார வளர்ச்சியைக் குறிப்பதாகவும் இருந்தது. 2012-ம் ஆண்டு 1,024 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாலத்தைப் பரிசோதித்தபோது, இன்னும் 3 ஆண்டுகளுக்கே போக்குவரத்து நெரிசலைத் தாங்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். உடனே பாலத்தை இடித்துவிட்டு, புதிதாகக் கட்டுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டது. 2015-ம் ஆண்டு மூடப்பட்ட பாலம், சில நாட்களுக்கு முன்பு மீண்டும் திறக்கப்பட்டது. இந்த முறை சாலைகளில் வாகனங்களும் பாலத்தில் மனிதர்களும் செல்லும்படி அமைத்துவிட்டனர். சியோல்லோ 7017 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாலத்தில் தொங்கும் தோட்டத்தை அமைத்திருக்கின்றனர். மிகப் பெரிய 645 கான்க்ரீட் தொட்டிகளில் 228 வகை தாவரங்களை வைத்திருக்கிறார்கள். இவற்றில் ஆளுயர மரங்களும் உண்டு. பாலத்தில் எந்தப் பகுதியிலிருந்தும் ஏறி இறங்குவதற்கு வசதியாக 17 இடங்களில் படிக்கட்டுகள் இருக்கின்றன. “நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த பாலத்தைக் கட்டிடக் கலையின் முன்னேற்றத்தைக் காட்டும்படி அமைத்திருந்தோம். பாலத்தைச் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக அமைத்திருக்கிறோம். நடந்து செல்பவர்களுக்குப் பாலம் சுவாரசியத்தை அளிக்கும். தூய்மையான காற்றும் கிடைக்கும். இரவு நேரத்தில் மரங்களை வண்ண விளக்குகளால் அலங்கரித்துள்ளோம். பகலில் ஒருவித அழகையும் இரவில் இன்னொரு வித அழகையும் ரசிக்கலாம்” என்கிறது சியோல்லோவை வடிவமைத்த நிறுவனம்.

பாதசாரிகளுக்கு நம் ஊர்களில் இடமே இல்லை!

ஜப்பானின் இஷிகாவா பகுதியில் இருக்கும் கோல்ட் கர்ரி உணவகத்தில் குறிப்பிட்ட நேரத்துக்குள், குறிப்பிட்ட அளவு உணவுகளைச் சாப்பிடுபவர்களுக்கு 58 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது. ஒரு மணி நேரத்தில் 9 கிலோ உணவுகளைக் காலி செய்தால்தான் இந்தப் பரிசு கிடைக்கும். சவாலை ஏற்றுக் கொண்டு சாப்பிடச் செல்பவர்களுக்கு முதலில் 2 கிலோ சாதமும் குழம்பும் வழங்கப்படுகிறது. இதை 15 நிமிடங்களுக்குள் சாப்பிட் டு முடித்தால், உணவுக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டிய தில்லை. அடுத்து 4 கிலோ உணவை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடிக்க வேண்டும். பிறகு 15 நிமிடங்களில் 3 கிலோ உணவைச் சாப்பிட்டு முடித்தால், சாப்பிட்ட உணவுகளுக்குக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. உணவகம் 58 ஆயிரம் ரூபாய் பரிசையும் வழங்கிவிடும். ஒருவேளை போட்டியில் வெற்றி பெற முடியாமல் போனால், சாப்பிட்ட உணவுகளுக்குக் கட்டணத்தைச் செலுத்தி விட்டுச் செல்ல வேண்டும். சாதாரணமான மனிதர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு, வெற்றி பெறுவது சாத்தியமில்லை. ஆனால் உணவுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு போட்டியில் கலந்துகொண்டால் பரிசைப் பெற்றுவிடலாம். இதுவரை ஒருவர் கூட போட்டியில் வெற்றி பெறவில்லை.

இது வயிறா, பத்தாயமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x