

சர்வாதிகாரியாக விளங்கினாலும் ஒமர் டோரிஜோஸ் பனாமா கால்வாய் பனாமாவிடமே வந்து சேர்வதற்கான ஒப்பந்தத்தை போட்டதால் நன்மதிப்பைப் பெற்றார். சிறந்த பேச்சாளரான அவர் விமான விபத்தில் மறைந்தார். மானுவல் நொரீகாவும் பனாமா வரலாற்றில் ஒதுக்க முடியாதவர். அவர் குறித்து...
மானுவல் நொரீகா இவரும் ஒரு ராணுவத் தளபதிதான். வன்முறை மூலமாக பனாமாவில் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். ராணுவத் தளபதியாக இருந்த இவர் கொஞ்சம் கொஞ்சமாக அதிகார மையத்துக்கு தன்னை மையப்படுத்திக் கொண்டார். 1989-ல் பனாமாவில் அதிபர் தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால் அந்தத் தேர்தலை ரத்து செய்தார் நொரீகா. தானாகவே ஒரு ஒப்புக்குச் சப்பாணி அரசை உருவாக்கி பின்னாலிருந்து அதை பொம்மலாட்டம்போல ஆட்டி வைத்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் இவர் நேரடியாகவே ஆட்சியைப் பிடிக்க முயன்றபோது அமெரிக்கா பனாமாவைக் கைப்பற்றியது. ஜனவரி 1990-ல் நொரீகா சரணடைந்தார். இவரது பின்னணி சுவாரசியமானவை.
1950-களில் அமெரிக்காவுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். பெருவில் ராணுவ அகாடமியில் மாணவராக இருந்து கொண்டே அமெரிக்க உளவுத் துறைக்குத் தகவல் அளித்துக் கொண்டிருந்தாராம்.
பிறகு ராணுவத் தளபதி ஒமர் டோரிஜோஸுக்கு அணுக்கம் ஆனார். விமான விபத்தொன்றில் ஒமர் டோரிஜோஸ் இறந்த பிறகு, நொரீகா பனாமாவின் அதிகாரத்தை மறைமுகமாகக் கைப்பற்றினார்.
அப்போது இது அமெரிக்காவுக்கு கசப்பாக இல்லை. ஏனென்றால் வேண்டிய தகவல்கள் அவர் மூலம் அமெரிக்காவுக்கு வந்து கொண்டிருந்தன. ஆனால் அவர் மீது அமெரிக்க அரசுக்கு சந்தேகங்கள் எழத் தொடங்கின. பிற உளவு நிறுவனங்களுக்கும் இவர் தகவல் கொடுக்கிறாரோ? போதை தடுப்பு அமைப்புகளுடன் மிகவும் ஸ்நேகமாக இருக்கிறாரோ?
நொரீகாவின் அரசியல் எதிரியான தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அவரது தலை தனியே துண்டிக்கப்பட்டிருந்தது. நொரீகா தனது கை மீறிச் செல்கிறார் என்று அமெரிக்கா கருதத் தொடங்கியது. நொரீகா சுயமான முடிவுகளை எடுப்பதை அமெரிக்கா ரசிக்கவில்லை.
1988-ல் அமெரிக்க நீதிமன்றம் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக நேரடியாகவே நொரீகாவின் மீது குற்றம் சுமத்தியது. 1989 தேர்தலில் நொரீகா செய்த தில்லுமுல்லுகளும் அலசப்பட்டன.
அமெரிக்காவின் கடற்படையைச் சேர்ந்த ஒரு வீரர் பனாமாவில் கொல்லப்பட்டதும், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் (சீனியர்) பனாமாவின் மீது ஆக்கிரமிப்பு நடத்தினார்.
நொரீகா பனாமாவின் தலைநகரிலிருந்த வாடிகன் தூதரகத்தில் அடைக்கலம் புகுந் தார். அமெரிக்கா திகைத்தது. வித்தியாசமாக ஒரு செயலைச் செய்தது. அந்த தூதரகத்தின் வெளியில் தொடர்ந்து நாராசமான இசையை ஒலிக்கச் செய்தது. நொரீகா வெளிவந்தால் தான் இசை (ஓசை) நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
1990 ஜனவரி 3 அன்று நொரீகா சரணடைந் தார். அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப் பட்டார். அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 17 வருடங்கள் சிறை தண்டனை. மியாமி சிறையில் அடைக்கப்பட்டார். நடுநடுவே வேறு பல வழக்குகளும் அவர் மீது பாய்ந்தன. பிரான்ஸ் அரசு தங்களிடம் நொரீகாவை ஒப்படைக்க வேண்டும் என்று கூற, அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதை ஏற்றது. ஆனால் பாரிசில் அவர் மீது புதிதாக ஒரு வழக்கு போடப்பட்டது. வரி ஏய்ப்பு தொடர்பாக ஏழு வருடங்கள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. பின்பு பனாமா அரசின் கோரிக்கையை ஏற்று அவர் பனாமாவுக்கு அனுப்பப்பட, அங்கும் அவர் குற்றவாளியாகக் கருதப்பட்டார்.
பனாமாவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையைப் பெற்றவர் மிரேயா எலிசா மோஸ்கோசா என்பவர். 1999-ல் இருந்து 2004 வரை இவர் அதிபராக ஆட்சி செய்தார்.
எளிமையான குடும்பத்தில் பிறந்த இவரது வாழ்க்கை சாகசங்கள் நிரம்பியது. மும்முறை பனாமாவின் அதிபராக விளங்கிய அர்னுல்ஃபோ ஏரியஸ் என்பவரின் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாகப் பங்கு கொண்டார். பிறகு அர்னுல்ஃபோ ஏரியஸை தீவிரமாகப் பின் தொடர்ந்து திருமணமும் செய்து கொண்டார். ஆனால் அவர் திருமணம் செய்து கொண்ட காலகட்டம் மகிழ்ச்சிகரமானதில்லை. ராணுவம் அரசைக் கைப்பற்ற, மறைவிடத்துக்கு ஓடினார் ஏரியஸ். அந்தக் காலகட்டத்தில்தான் அவரைத் திருமணம் செய்து கொண்டார் மோஸ்கோசா.
ஏரியஸ் மணவாழ்க்கை வாழ்ந்தது அமெரிக்காவிலுள்ள ஃப்ளோரிடாவின் மியாமி பகுதியில். அங்குதான் மோஸ்கோசோ அவரைத் திருமணம் செய்து கொண்டார். அப்போது மணமகளுக்கு வயது 23. மணமகனுக்கு வயது 67. இந்தக் காலக்கட்டத்தில் அங்குள்ள ஒரு கல்லூரியில் ‘‘இன்டரியர் டிசைனிங்’’ கல்வியில் கற்றுத் தேர்ந்தார். 1988-ல் கணவர் இறந்த பிறகு அவரது காபி வணிகத்தைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். பிறகு அவர் கட்சியையும் தன் வசம் கொண்டு வந்தார்.
1994 பொதுத் தேர்தலில் நூலிழையில் தோற்றார். அதற்கு ஐந்து வருடங்களுக்குப் பின் நூலிழையைவிட சற்று அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபர் ஆனார்.
(உலகம் உருளும்)