

ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பேரழிவின் 3-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி ஏற்பட்ட ஆழிப்பேரலை அந்நாட்டில் சுமார் 18 ஆயிரம் பேரை பலிகொண்டதுடன், கடலோர கட்டுமானங்களை உருக்குலைத்தது. புகுஷிமா அணுமின் நிலையத்தை செயலிழக்கச் செய்ததன் மூலம் அணுசக்தி பயன்பாடு குறித்த மறு சிந்தனையை தோற்றுவித்தது.
கடலில் 9 ரிக்டர் அளவிலான நிலநடுக் கத்தை தொடர்ந்து ஏற்பட்ட இந்தப் பேரலைக்கு 15,884 பேர் பலியானதாகவும், 2,663 பேர் காணாமல் போனதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இயற்கையின் இந்த கோரத் தாண்டவத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் ஜப்பானில் நேற்று அனுசரிக்கப்பட்டது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நினைவிடங்களில் உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தலைநகர் டோக்கியோவில் நடந்த நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு மன்னர் அகிடோ, அரசி மிச்சி கோ தலைமை வகித்தனர். 3 ஆண்டுகளுக்கு முன் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்ட அதே நேரத்தில், நாடு முழுவதும் மக்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.