

சுவிட்சர்லாந்தின் ஜுரிச் நகரில் உள்ள ஒரு நகைக் கடையில் பட்டப் பகலிலேயே துப்பாக்கி முனையில் ரூ.68 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் கைக்கடிகாரங்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து ஜுரிச் நகர போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புகழ்பெற்ற கோபார்டு நகைக் கடையில் புதன்கிழமை துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர்கள் சிலர், அங்கிருந்த ஊழியர்களை சுட்டுக் கொன்று விடுவதாக மிரட்டினர். பின்னர் நகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அலமாரிகளை உடைத்து அதில் இருந்த மோதிரம், காதணி உள்ளிட்ட நகைகள் மற்றும் கைக்கடிகாரங்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
ஹெல்மெட் அணிந்திருந்த கொள்ளையர்கள் ரூ.68 லட்சம் மதிப்புள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர். எனினும் இந்த சம்பவத்தின்போது கடை ஊழியர்கள் எவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் பிரான்ஸின் கேன்ஸ் நகரில் நடைபெற்ற திரைப்பட விழா வின்போது, கோபார்டு நகைக் குழுமத்தின் அமெரிக்க ஊழியர் தங்கி இருந்த ஓட்டல் அறையிலிருந்து ரூ.8.6 கோடி மதிப்புள்ள நகைகள் கொள் ளையடிக்கப்பட்டன.
திரைப்பட நடிகர்களுக்கு கடனாக கொடுப்பதற்காக அந்த நகைகள் அங்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.