

ஸ்லோவேனியாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக பெரும்பாலான பகுதிகளில் பனிக்கட்டிகள் உறைந்துள்ளதால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. 1.2 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
வழக்கத்தைவிட பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் இரவு நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தது.
தலைநகர் ஜுப்ஜனாவுக்கு தெற்கே 40 கி.மீ. தொலைவில் உள்ள போஸ்டோஜ்னா பகுதியில் துண்டிக்கப்பட்டுள்ள மின்சார வயர்கள் மீது பனிக்கட்டிகள் உறைந்துள்ளதுடன் மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. தொடர்ந்து வானிலை மோசமாக உள்ளதால் அதை சரிசெய்ய முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் 1.2 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. 2.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மின்சார வயர் அறுந்து விழுந்த தால் தலைநகரை ஆட்ரியாட்டிக் கடற்கரையுடன் இணைக்கும் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. மேலும், மரங்கள் முறிந்து விழுந்ததாலும், மின்சார வயர்கள் அறுந்து விழுந்ததாலும் பல சாலைகள் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பனி காரணமாக 75 சதவீத பள்ளிக்கூடங்கள் செவ்வாய்க் கிழமை மூடப்படுவதாக அந்நாட்டு கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
போஸ்டோஜ்னா பகுதியை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட் அந்நாட்டு பிரதமர் அலென்கா பிரடுசெக் "இது மிகப் பெரிய இயற்கைப் பேரழிவு" என தெரிவித்துள்ளார். மேலும், மின் பற்றாக்குறையை சமா ளிக்க அதிக அளவில் மின்சார ஜெனரேட்டர்களை வழங்கி உதவு மாறு ஐரோப்பிய யூனியனுக்கு கோரிக்கை வைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.