

புகழ்பெற்ற சமூக ஆர்வலரை ஐஎஸ் தீவிரவாதி என்று தவறாக செய்தி வெளியானதால், ட்விட்டர் சமூக இணையதளம், அவரது பக்கத்தை தற்காலிகமாக முடக்கியது. எனினும் பின்னர் இந்தத் தடை வாபஸ் பெறப்பட்டது.
அடிப்படைவாதத்துக்கு எதிராக போராடி வருபவர் ஐயத் எல்-பாக்தாதி. ட்விட்டரில் இவரை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். இந்நிலை யில் தனது ட்விட்டர் பக்கம் 30 நிமிடங்கள் வரை தடை செய்யப் பட்டதாக பாக்தாதி கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, “இந்தோனேசிய பத்திரிகையான ரிபப்ளிகா, நியூயார்க் போஸ்ட், பிபிசி ஆகியவற்றில், எனது ட்விட்டர் பக்கம் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர் அபு பக் அல்-பாக்தாதிக்கு சொந்த மானது என தவறான செய்தி வெளியிட்டதே இதற்குக் காரணம்.எல்-பாக்தாதி என்ற பெயர் பலருக்கு இருக்கும் நிலையில் இதை சரிபார்க்காமல் எனது பக்கத்தை ட்விட்டர் தடை செய்தது.
மேலும் இதுகுறித்து எனக்கு ட்விட்டர் நிர்வாகம் அனுப்பிய தகவலில், விதிகளை மீறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளதே தவிர, காரணத்தை தெளிவாக தெரிவிக்கவில்லை. ட்விட்டரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. குறிப்பிட்ட நபரின் பக்கத்தை முடக்கும்போது, அதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டியது அவசியம். எனவே தவறாக செய்தி வெளி யிட்ட நிறுவனங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.
எனினும் இதுதொடர்பாக ட்விட்டர் நிர்வாகம் எந்தக் கருத்தை யும் தெரிவிக்கவில்லை.