Published : 16 Jul 2016 07:39 AM
Last Updated : 16 Jul 2016 07:39 AM

பிரான்ஸின் நீஸ் நகரில் பாதுகாப்புப் படையினர் தடுப்பை மீறி கூட்டத்தில் லாரி புகுந்தது எப்படி?

பிரான்ஸின் நீஸ் நகரில் பாதுகாப்புப் படையினரின் சோதனையை மீறி கனரக லாரி கூட்டத்தில் எவ்வாறு புகுந்தது என்று அந்த நாட்டு மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தீவிரவாத அச்சுறுத்தல் காரண மாக ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக் கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரான் ஸில் உள்நாட்டுப் பாதுகாப்புப் பணியில் ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

தேசிய தினத்தையொட்டி நீஸ் நகரில் நேற்றுமுன்தினம் இரவு வாண வேடிக்கை நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது கடற்கரை பகுதி வான்பரப்பு முழுவதும் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக வண்ணமயமாக ஜொலித்தது. சுமார் 10.30 மணி அளவில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நிறைவு பெற்றது. அப்போதுதான் கடற்கரை பகுதியின் நுழைவு சாலையில் கனரக லாரி அதிவேகமாக வந்து பொதுமக்கள் மீது மோதியுள்ளது.

பொதுவாக பிரான்ஸில் முக்கிய விழாக்கள் நடைபெறும் பகுதிகளில் வாகனங்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. அதன்படி நீஸ் நகர கடற்கரை சாலைகளில் மாலை 3 மணிக்கே வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கார் உள்ளிட்ட வாகனங்களை கூட போலீஸார் அனுமதிக்கவில்லை.

தீவிரவாதி முகமது ஓட்டி வந்த லாரியை போலீஸார் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால் அங்குள்ள கடைகளுக்கு ஐஸ்கிரீம் எடுத்துச் செல்வதாக முகமது கூறியுள்ளான். இதை நம்பிய போலீஸார் லாரியை கடற்கரை சாலைக்குள் அனுமதித்துள்ளனர். நுழைவு வாயிலிலேயே முறையாக சோதனை நடத்தி தடுத்திருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சிசிடிவி கேமரா ஆய்வு

தீவிரவாதி எவ்வாறு கூட்டத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினான் என்பது குறித்து அங்குள்ள 1200 சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சாலையில் தாறுமாறாக தீவிரவாதி லாரியை ஓட்டியுள்ளான். சுமார் 70 கி.மீட்டர் வேகத்தில் லாரி சென்றதாக நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதி பயன்படுத்திய துப்பாக்கியை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். லாரியை சோதனை செய்தபோது ஒரு கைத்துப்பாக்கி மட்டும் கிடைத்துள்ளது. வேறு எந்த வெடிபொருளும் இல்லை.

ஐ.எஸ். கொண்டாட்டம்

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஆதரவு இணையதளங்களில் நீஸ் தாக்குதல் கொண்டாடப்பட்டு வருகிறது. தாக்குதலை நடத்திய தீவிரவாதியை போற்றும் வகையில் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதேநேரம் உலகின் பல்வேறு நகரங்களில் நீஸ் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆஸ்திரேலியா வின் சிட்னி ஹார்பர் பாலத்தில் பிரான்ஸ் தேசிய கொடி பறக்க விடப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க், டல்லாஸ் நகரின் உயர்ந்த கட்டிடங்களில் பிரான்ஸ் தேசிய கொடி ஏற்றப்பட்டது. ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் துக்க நிகழ்ச்சிகள் அனுசரிக்கப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x