Published : 02 Jun 2017 09:07 AM
Last Updated : 02 Jun 2017 09:07 AM

ஜப்பானில் கதிரியக்க கலக்கம்: மீண்டும் வர மறுக்கும் கிராம மக்கள்

”இனி கதிரியக்க பயம் தேவையில்லை. தாராளமாகத் திரும்ப வரலாம்” என்று ஜப்பானிய அரசு அறிவித்தும் இடேட் என்ற கிராமத்தில் முன்பு வசித்த மக்கள் அதை நம்புவதற்குப் பெரும் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

இடேட் ஒரு விவசாய கிராமம். ஃபுகுஷிமா அணுஉலையிலிருந்து 24 மைல் வடமேற்கில் உள்ளது.

ஃபுகுஷிமாவில் அணு விபத்து 2011 மார்ச் 11 அன்று ஏற்பட்டது. கடும் நில அதிர்வு மற்றும் சுனாமி ஆகியவை ஃபுகுஷிமாவிலுள்ள அணுஉலைகளின் குளிர்விக்கும் பகுதிகளைச் சேதப்படுத்தின. போதிய அளவு குளிரூட்டப்படாத தால் மூன்று அணுஉலைகளில் வெடிப்பு ஏற்பட்டு கதிரியக்கப் பொருட்கள் சுற்றிலும் பரவின. அவை வாழத்தகாத பகுதிக ளாயின (கதிரியக்கப் பொருட்கள் தண்ணீரிலும் கலந்து, அதனால் பலவித ஆரோக்கியக் கேடுகள் உண்டாயின). சுற்றிலும் உள்ள பகுதிகளின் மக்கள் வெளியேறி னார்கள், வெளியேற்றப்பட்டார்கள்.

கதிரியக்கத்தை நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட அரசு, இப்போது அந்தப் பகுதியிலுள்ள காற்றில் கலந்துள்ள சராசரி கதிரியக்க விகிதம் மிகவும் குறைந்து விட்டது என்றது. சர்வதேச அளவீடுகளின்படி அது மனித உயிரைப் பாதிக்காத அளவு என்றும் கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. எனவே கிராமத்திலிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் அங்கு வரலாம் என்றது. கூடவே இந்த அறிவிப்பு வெளியான ஒரு வருடத்திற்குள் அப்படி வராதவர்களுக்கு மாதந்தோறும் அளிக்கப்படும் நஷ்ட ஈட்டுத் தொகை நிறுத்தப்பட்டுவிடும் என்றும் எச்சரித்துள்ளது.

இதுவரை சுமார் 100 பேர்தான் இடேட் கிராமத்துக்கு மீண்டும் வந்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வயதில் மிக மூத்தவர்கள். அவர்கள் மனநிலை விரக்தி நிரம்பியதாக இருக்கக் கூடும்.

ஜப்பான் அரசு அவசர அவசரமாக இந்தப் பகுதியில் ஒரு விளையாட்டு மைதானம், பெரிய உணவகம், பல்பொருள் அங்காடி ஆகியவற்றைத் தொடங்கியிருக்கிறது. ஒரு சிறிய க்ளினிக்கையும் திறந்திருக்கிறது.

ரஷ்யாவில் செர்னோபில் அணுஉலை விபத்து 1980-க் களில் உண்டானதைத் தொடர்ந்து இன்றுவரை அந்தப் பகுதி மனிதர்கள் வாழாத இடமாகத்தான் இருந்து வருகிறது. அதுபோன்ற நிலை ஃபுகுஷிமா பகுதிக்கும் உண்டாகிவிடக் கூடாது என்பதுதான் ஜப்பானின் பயம். (2020-ல் ஒலிம்பிக் பந்தயங்கள் டோக்கியோவில் நடைபெறும்போது ஃபுகுஷிமா மேலும் அதிக அளவில் கவனம் பெறும்). ஆனால் மக்களின் பயம் வேறாக இருப்பதால் மீண்டும் அந்தப் பகுதிக்கு வருபவர்களின் எண்ணிக்கை சொற்பமாகவே இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x