

தகவல்-அறிவியல்-தொழில் நுட்பத் துறைகளில் இந்தியாவின் இளம் திறமைகளைப் புறக்கணித்து சீனா தவறு செய்து விட்டது என்கிறது அந்நாட்டு அரசிதழ்.
சீனாவில் தகவல் மற்றும் தொழில்நுட்ப திறமைகளுக்கு நாளுக்குநாள் தேவை அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் இது தொடர்பாக இருந்து வரும் திறமைகளை சீனா பயன்படுத்திக் கொள்ளாமல் அலட்சியம் காட்டி தவறிழைத்து விட்டது என்று சீன அரசிதழன குளோபல் டைம்ஸ் தலையங்கம் தீட்டியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து திறமைகளைக் கொண்டு வருவதில் சீனா அதீத முக்கியத்துவம் அளித்து வந்திருக்கிறது, இந்திய திறமைகளை மதித்திருக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியுள்ளது.
மேலும், “இந்தியப் பொறியாளரை நியமிப்பது சீன பொறியாளரை விட அரைமடங்கு செலவு குறைவானதாகும்” என்றும் அத்தலையங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் அதி-தொழில்நுட்ப திறமை சீனாவின் புதுமை புகுத்தும் தொழில்நுட்ப பிரிவுகளுக்கு மிகவும் அவசியம். இந்தியாவிலிருந்து அறிவியல் தொழில்நுட்ப திறமைகளை சீனா பயன்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குவதில் சீனா கடினமாக உழைக்கவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக முன்னெப்போதும் இல்லாததை விட எதிர்பாராத வகையில் தொழில்நுட்ப பணிகள் பெருகி விட்டிருக்கின்றன. அயல்நாட்டு ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு மையங்களுக்கு சீனா ஒரு கவர்ச்சிகரமான நாடாக இருந்து வருகிறது. இந்த வகையில் இந்தியத் திறமைகளை புறமொதுக்கி சீனா பெரிய தவறிழைத்து விட்டது. மாறாக அமெரிக்க, ஐரோப்பிய திறமைகளுக்கு அதிமுக்கியத்துவம் அளித்து வருகிறது.
சீனாவில் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களை ஈர்த்தோமானால் நமக்கும் செலவு குறையும் அந்த இந்தியப் பணியாளரின் ஊதியமும் இரட்டிப்புக்கு மேலாக உயரும்.
இருப்பினும், தற்போது சில உயர் தொழில் நுட்ப நிறுவனங்கள் செலவு குறைவு காரணமாக சீனாவிடமிருந்து இந்திய திறமைகள் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனவே சீனா தனது அறிவியல்-தகவல்-தொழில்நுட்பப் புலத்தில் புதுமையைப் புகுத்துவதில் இந்தியத் திறமைகளும் சீனாவின் ஒரு தெரிவாக இருப்பதே நல்லது.
அமெரிக்க மென்பொருள் நிறுவனம் ஒன்று 300 ஊழியர்கள் கொண்ட அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுவை கலைத்து விட்டு இந்தியாவில் 2000 நிபுணர்களைக் கொண்டு கிளை தொடங்கியது.
போதுமான இளம் திறமைகளுடன் இந்தியா ஈர்ப்புக்குரிய ஒருநாடாக விளங்குகிறது. உயர் தொழில்நுட்ப முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் சீனா சோடைபோய் விடக்கூடாது. உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவுடன் போட்டியிடும் சீனா இத்தகைய முடிவுகளை விரைவில் எடுக்க வேண்டியுள்ளது.
புதுமை தொழில்நுட்பத்திறன் மேம்பாட்டில் சீனாவின் திறமையாளர்கள் எண்ணிக்கை போதாமல் உள்ளது. குய்ஸூ மாகாணத்தில் சில நிறுவனங்கள் இந்திய தொழில்நுட்ப பொறியாளர்களுக்கு சிறந்த வீட்டு வசதி, காப்பீடு, போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவல்லது, பெங்களூரை விட உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அவர்கள் சீனாவில் கண்டடைய முடியும்.
இவ்வாறு அந்தத் தலையங்கம் இந்திய தகவல் தொழில்நுட்ப பொறியாளர்களுக்கு வலை விரித்துள்ளது.