

திபெத்துடன் இந்தியா மற்றும் நேபாள நாடுகளுக்கு இடையே யான இமாலய ரயில்வே இணைப்பு திட்டம் சாத்தியமானது தான் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
திபெத்தை பொருளாதார மற்றும் கலாச்சார மையமாக உருவாக்க சீனா முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக திபெத்துடன் இந்தியா மற்றும் நேபாள நாடுகளுக்கு இடையே இமயமலை வழியாக இமாலய ரயில்வே இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.
இது குறித்து பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் அறிவியில் மற்றும் தொழில்நுட்பத் துறை துணை இயக்குனர் ஜோங் காங் கூறும்போது, ‘‘இமயமலை வழியாக ரயில்வே கட்டுமான பணிகளை மேற்கொள்வது என்பது தற்போது பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் சாத்தியமானது தான்’’ என தெரிவித்துள்ளது.
திபெத்தில் உள்ள ஜிகசே என்ற நகரத்தில் இருந்து சீன எல்லையான கைராங் வழியாக நேபாளம் வரை ரயில்வே பாதையை நீட்டிக்க சீனா திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே சீனா தனது நாட்டில் இருந்து திபெத் எல்லை வரை 1,100 கி.மீ தூரத்துக்கான ரயில்வே பாதையை கடந்த 2006-ல் கட்டி முடித்தது. பின்னர் அங்கிருந்து 250 கி.மீ தூரம் உள்ள ஜிகசே வரை அந்தப் பாதை நீட்டிக்கப்பட்டது. தற்போது அங்கிருந்து நேபாளம் மற்றும் இந்தியாவின் சிக்கிம், உத்தராகண்ட் மாநில எல்லை அருகே உள்ள யடோங் மற்றும் புராங் வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.