அல்ஜீரியா ராணுவ விமான விபத்தில் 77 பேர் பலி: ஒருவர் மட்டும் உயிர் தப்பினார்

அல்ஜீரியா ராணுவ விமான விபத்தில் 77 பேர் பலி: ஒருவர் மட்டும் உயிர் தப்பினார்
Updated on
1 min read

அல்ஜீரியா ராணுவத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 77 பேர் பலியாயினர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுகுறித்து அந்நாட்டு பாது காப்பு அமைச்சம் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறியி ருப்பதாவது:

நாட்டின் தென்பகுதியில் தலைநகர் அல்ஜீயர்ஸிலிருந்து 320 கி.மீ. தொலைவில் உள்ள தமன்ரசெட் நகரிலிருந்து கான்ஸ்டன்டைன் நகருக்கு சி-130 ஹெர்குலிஸ் விமானம் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது. ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அடங்கிய 74 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் பயணம் செய்த அந்த விமானம், மலைப்பிரதேசமான ஓம் எல் புவாகி மாநிலத்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்துக் குள்ளானது.

தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவைச் சேர்ந்த 250 பேர் அப் பகுதிக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 77 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு கான்ஸ்டன்டை னில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மோசமான வானிலை, காற்றுடன் கூடிய பனி ஆகியவையே இந்த விபத்துக்குக் காரணம் என தெரியவந்துள்ளது. இந்த விமானத்தின் 2 கறுப்புப் பெட்டிகளில் ஒன்றை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் அப்துல் அஜிஸ் பூட்பிலிகா இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் புதன்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த விமானத்தில் 99 பயணிகள் உட்பட 103 பேர் பயணம் செய்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in