

இலங்கையுடன் நெருங்கிய நட்பு வைத்திருப்பதால் பிற (இந்தியா) நாடுகளுடனான உறவு பாதிக்காது என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி நேற்று தெரிவித்தார்.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இம்மாத இறுதியில் சீனா செல்கிறார். இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி 3 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை நேற்று சந்தித்துப் பேசினார். பின்னர் வாங் யி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சீனா, இலங்கை இடையிலான உறவு எந்த ஒரு மூன்றாவது நாட் டின் உறவிலும் பாதிப்பை ஏற்படுத் தக்கூடாது என்பது எங்கள் இரு நாடுகளின் ஒருமித்த கருத்தாக உள்ளது. சமுதாய வளர்ச்சியை எட்டுவதற்காக இந்த பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுடன் நெருங்கிய நட்பு வைத்துக்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.
அதேநேரம், இலங்கையின் வளர்ச்சிக்காக அந்த நாட்டுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம். பிற நாடுகள் இதுபற்றி கவலை யடையத் தேவையில்லை. இவ் வாறு அவர் தெரிவித்தார்.
இலங்கையில் ரூ.1,000 கோடி செலவில் கொழும்பு துறைமுக நகர திட்டத்தை செயல்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. இதற்கு இந்தியா கவலை தெரிவித்திருந் தது குறிப்பிடத்தக்கது.