

அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர்களான நிஷா பிஸ்வால் (தெற்கு, மத்திய ஆசியா) மற்றும் டாம் மலினோவ்ஸ்கி (ஜனநாயகம், மனித உரிமை மற்றும் தொழிலாளர் நலன்) ஆகியோர் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை அரசுடனான அரசியல் உறவை மேம்படுத்துவதற்காக அங்கு சென்றுள்ள இவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு (டிஎன்ஏ) பிரதிநிதிகள் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது, இலங்கை சிறைகளில் அடைக் கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாதது மற்றும் தமிழர்களிடமிருந்து (வடக்கு) ராணுவத்தால் பறிக்கப்பட்ட நிலத்தை திருப்பித் தராதது ஆகிய பிரச்சினைகள் குறித்து தங்கள் கவலையை வெளிப்படுத்தனர்.
மேலும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜெனீவா நகரில் நடைபெற்ற ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமல்படுத்துவதில் இலங்கை அரசு மெத்தனமாக செயல்படுவது குறித்தும் அவர்களிடம் புகார் செய்தனர்.
இதையடுத்து, ஜெனீவா தீர்மானத்தை அமல்படுத்துவதில் ஏற்படும் சவால்களுக்கு தீர்வு காண இலங்கை அரசுக்கு அமெரிக்கா உதவும் என்று டிஎன்ஏ பிரதிநிதிகளிடம் பிஸ்வால் உறுதி அளித்தார்.
மேலும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீராவை சந்தித்த அமெரிக்க அமைச்சர்கள், உள்நாட்டுப் போருக்கு பிந்தைய நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு உதவ தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.