Last Updated : 03 Dec, 2013 12:00 AM

 

Published : 03 Dec 2013 12:00 AM
Last Updated : 03 Dec 2013 12:00 AM

யோக்கியவான்களின் நிரூபித்தல் திருவிழா

அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தியை அதிரடிப் புரட்சி மூலம் வெளிப்படுத்தும் கலாசாரம் தொன்மையானதுதான். ஆனால் அதன் நவீன வடிவத்தை மறு அறிமுகப்படுத்தி, சமூக வலைத்தளங்களைப் புரட்சிக்குப் பயன்படுத்தி, இன்னும் சீக்கிரம் நினைத்ததைச் சாதிக்கலாம் என்று காட்டியவர்கள் துனிஷியர்கள் (2011). லிபியா, சிரியா, எகிப்து, ஏமன், பஹ்ரைன் என்று மத்தியக் கிழக்கில் ஆரம்பித்து இன்றைக்கு உக்ரைன், தாய்லாந்து வரைக்கும் இந்தப் புரட்சிப் பட்டாசு வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. பர்மா, மலேசியா என இன்னும் சில தென்கிழக்காசிய தேசங்களிலும் இது வெகு விரைவில் வீறுகொள்ளக்கூடுமென்று தெரிகிறது.

நித்ய கலவர பூமியான ஆப்கனிஸ்தான், இராக் போன்ற பிராந்தியங்களில் பெரும் யுத்தங்களும் தொடர்வதான அமைதி முயற்சிகளின் விளைவாக பொம்மை அரசுகளும் தேர்தல் திருவிழாக்களும் ஒரு பக்கம் நடந்தாலும் உலகின் பெரும்பாலான தேசங்களில் ஆட்சி ஆட்டம் கண்டுகொண்டிருப்பது கண்கூடு.

கடந்த ஞாயிறன்று உக்ரைனில் தீவிரமடைந்த மக்கள் புரட்சி எதிர்க்கட்சிகளால் வடிவமைக்கப்பட்டதென்று சொல்லப்பட்டாலும் சுமார் மூன்றரை லட்சம் பேர் எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலால் மட்டுமே திரண்டிருப்பார்கள் என்று எண்ணிவிட முடியுமா?

ஒன்பது வருடங்களுக்கு முன்னர் உக்ரைனில் நடைபெற்ற ஆரஞ்சுப் புரட்சிக்கு அப்புறம் இத்தனை வீரியம், இத்தனை உக்கிரம், இத்தனை கோபம் பார்க்க நேர்வது இதுவே முதல்முறை. அதற்குச் சற்றும் குறையாத வீரியத்துடன் தாய்லாந்தில் அதே ஞாயிற்றுக்கிழமை சுமார் முப்பதாயிரம் பேர் அரசுக்கு எதிராகத் திரண்டு வந்து அதகளம் செய்திருக்கிறார்கள். தாய்லாந்து பிரதமர் அச்சத்தில் வெளியே வரவேயில்லை. இருந்த இடத்திலிருந்தே ஸ்டாப் ப்ளாக்கில் காணாமல் போய்விட்டார். அவர் எங்கே போயிருக்கிறார் என்பதைக் கூட யாரும் சொல்லத் தயாராயில்லை.

இதுவும் எதிர்க்கட்சிகள் வடிவமைத்த புரட்சிதான். இந்த ஆட்சி வேண்டாம் என்கிற ஒற்றைக் கோஷம்தான். நீ எதிர்த்தால் நான் அடக்குவேன் என்ற அதே புராதன அடிதடி எதிர்வினைதான் இங்கும் நடந்திருக்கிறது. ஆனால் ஜனங்கள் இதற்கெல்லாம் பயப்படுவதாக இல்லை. தாய்லாந்தில் பத்து தினங்களாகத் தீவிரம் பெற்று வரும் புரட்சி, ஞாயிற்றுக்கிழமையன்று அரசுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.

உண்மையில் இது புரட்சியின் முதல் கட்டம்தான். ஆட்சிக் கவிழ்ப்பை விரும்பும் எதிர்க்கட்சிகளின் போர்க் குரலுக்கும் ஆட்சி மாற்றம் விரும்பும் மக்களின் ஏக்கத்துக்குமான வித்தியாசத்தைப் புரியவைத்திருக்கும் சம்பவம். உக்ரைனியர்கள் தமது வளமான எதிர்காலம் கருதி ஐரோப்பிய யூனியனுடன் சுமுகமான அரசியல் மற்றும் பொருளாதார, வர்த்தக ஏற்பாடுகளைச் செய்துகொள்ளும்படி அரசை நல்லவிதமாகத்தான் முதலில் கேட்டுப் பார்த்தார்கள். அது ஒன்றும் வேலைக்கு ஆகாத கடுப்பில்தான் இப்போது வீதிக்கு வந்திருக்கிறார்கள்.

சரித்திரம் இதுவரை சொல்லித் தந்திருக்கும் பாடம் மிக எளிமையானது; வெளிப்படையானது. மக்களின் ஆதரவு பெறாத எந்தப் புரட்சியும் எந்த தேசத்திலும் வெற்றி கண்டதில்லை. ஈழம் முதல் எகிப்து வரை; பக்ரைன் முதல் உக்ரைன் வரை! புடைவைக் கடை சேல்ஸ்மன் மாதிரி உதாரணங்களை எடுத்துப் போட்டுக்கொண்டே இருக்கலாம்.

இப்போது படு உக்கிரமாக ஆயுதப் புரட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் சிரியா போன்ற தேசங்களின் போராளிகள் இதனைச் சிந்தித்துப் பார்க்கலாம். நவீன காலம் ஆயுதப் போராட்டங்களுக்கு சாதகமாக இல்லை. ஓரெல்லைவரை அது மக்கள் மத்தியில் கிளர்ச்சியையும் கிளுகிளுப்பையும் உண்டாக்குகிறது என்பதை மறுக்க இயலாது என்றாலும் நீண்டநாள் நோக்கில் அது பெரும்பாலும் பலன் தருவதேயில்லை.

உக்ரைனிலும் தாய்லாந்திலும் வெடித்திருக்கும் மக்கள் புரட்சியில் கலவர காண்டமும் அரங்கேறத்தான் செய்தது. தாக்குதல்கள் நடக்காமல் இல்லை. கல்லெறிகளும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வீசப்படாமல் இல்லை. ஆனால் இங்கெல்லாம் போராட்டங்களின் வழிமுறை ஆயுதமல்ல என்பதைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். உணர்ச்சி வேகத்தில்தான் அதுவும் நடந்திருக்கிறது. எனவே ஒதுக்கித் தள்ள அதிக அவகாசம் பிடிக்காது.

மக்கள் விரோத அரசுகளுக்கு இப்போது அஷ்டமத்துச் சனி. ஆட்டிப்படைக்காமல் விடாது. உலகெங்கும் யோக்கியவான்கள் தம்மை நிரூபித்தே தீரவேண்டிய இருப்பியல் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதுவும் கடந்துபோகும் என்று இந்த ஒரு விஷயத்தில் மட்டும் சொல்லத் தோன்றவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x