

ரஷியாவுடன் கிரிமியா இணைவதற்கான ஒப்பந்தத்தில் ரஷியா மற்றும் கிரிமியாவின் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டனர். ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், கிரிமியாவின் பிரதமர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு ரஷியாவின் அரசியல் சட்ட நீதிமன்றம் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அங்கீகரிக்க வேண்டும். ஆனால் இவை இரண்டும் சம்பிரதாய நட வடிக்கைகளாகும். ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன் ரஷிய அதிபர் புதின், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார்.
ரஷியா உக்ரைன் இடையி லான வரலாற்றுப்பூர்வ உறவை துண்டிக்கும் வகையில் மேற் கத்திய நாடுகள் உக்ரைனில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவ தாக குற்றம் சாட்டிய புதின், கிரிமியாவில் நடந்த பொது வாக்கெடுப்பு சட்ட விரோதமானது என்று இந்நாடுகள் கூறுவதை நிராகரித்தார். கிரிமிய மக்களின் சுயநிர்ணய உரிமையின் கீழ் சர்வதேச விதிகளுக்குட்பட்டே அங்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது என்ற அவர் உக்ரைன் இடைக்கால அரசு மற்றும் மேற்கத்திய நாடுகளின் செயல்பாடுகளை கடுமையாக சாடினார்.
இந்தியாவுக்கு நன்றி
முன்னதாக ரஷிய நாடாளு மன்றத்தில் புதின் பேசுகையில், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
“கிரிமிய நிகழ்வுகளை வரலாற்று மற்றும் அரசியல் ஒருங்கிணைப்பாக நோக்கிய சீன அரசுக்கும் சீன மக்களுக்கும் நன்றி. இந்த விவகாரத்தில் மிகவும் கட்டுப்பாட்டுடனும், உயர்ந்த குறிக்கோளுடனும் நடந்துகொண்ட இந்தியாவை மிகவும் பாராட்டுகிறோம்” என்றார்.
இதனிடையே ஜி8 நாடுகள் அமைப்பில் இருந்து ரஷியா சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.