விரல் சொடுக்கும் வடகொரியா - 6

விரல் சொடுக்கும் வடகொரியா - 6
Updated on
2 min read

வட கொரியாவைப் பற்றிய ஒரு ரகசியம் தெரியுமா? அது மிகவும் ரகசியமான நாடு என்பதுதான் அந்த ரகசியம். அதன் மக்கள் சட்டென்று வெளி நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் சென்று விடமுடியாது.

வட கொரியத் தலைநகரில் அமைந்துள்ளது ஒரு சிலை. அது வட கொரியாவை நிறுவியரான கிம் இல் சுங் என்பவருடையது. 20 மீட்டர் உயரம் கொண்ட வெண்கலச் சிலையான இது தினமும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. சில வருடங் களுக்கு முன் இதற்குத் தங்க முலாம் பூசப்பட்டது. ஆனால் சீனாவின் ஆலோசனை யின் பேரில் (கம்யூனிஸத் தலைவருக்கு இவ்வளவு ஆடம்பரம் செய்தால் பார்ப்ப வர்கள் என்ன நினைத்துக் கொள்வார்கள்?) தங்க முலாமை நீக்கி விட்டார்கள்.

வட கொரியாவைப் பற்றிய ரகசியங்களும் இப்படித்தான் முலாம் நீங்கியத்தைப்போல வெளிப்பட்டு வருகின்றன. அந்த நாட்டுக்குச் சுற்றுலா செல்பவர்கள் குறிப்பிட்ட சில இடங்களை மட்டுமே பார்க்க முடியும். உள்ளூர் மக்களுடன் அவர்கள் மனம்விட்டுப் பேசிவிட முடியாது. ஆனால் வேறொரு ஊடுருவலை வட கொரியாவால் தடுக்க முடியவில்லை. அது செயற்கைக் கோள் மூலமாக மேலிருந்தபடி வட கொரியாவைப் படமெடுத்துத் தள்ளும் கேமராக்கள்தான். இதன் மூலமாக வட கொரியாவின் பல பகுதிகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.

எழுபதுகளில் தென் கொரியாவை மிஞ்சி நின்றது வட கொரியப் பொருளாதாரம். இப்போது நிலைமை தலைகீழ். வட கொரியாவில் கடும் உணவுப் பஞ்சம். ஐ.நா.வின் உலக உணவு திட்டம் என்ற அமைப்பு ‘‘வட கொரியாவிலுள்ள பல லட்சம் மக்கள் உணவுக்கான தேவையில் இருக்கிறார்கள்’ என்று அறிவித்துள்ளது.

நாட்டில் அவ்வப்போது வெள்ளமும், பஞ்சமும் மாறிமாறி தலைவிரித்தாடுகின்றன. நிலம் சத்திழந்துபோய் விட்டது. ‘வடகொரியா ஒரு பயனில்லாத நிலமாகி விட்டது’’ என்கிறார்கள் நில இயல் நிபுணர்கள். பசியின் காரணமாக வட கொரியாவில் உள்ள ஆடுகளில் பாதிக்கும் மேல் வெட்டப் பட்டு உணவாகிவிட்டன. உரத்தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன - அவற்றிற்குத் தேவையான கச்சாப் பொருள் கிடைக்காததால்.

வருமானத்திற்காக சில ஆபத்தான விஷயங்களுக்கும் கதவைத் திறந்தது வட கொரியா. ‘ உரிய கட்டணம் செலுத்தினால் பிற நாடுகள் தங்கள் கழிவுகளை தங்கள் நாட்டில் குவிக்கலாம் என்று அறிவித்தது. அவ்வளவுதான், தைவானும் ஜெர்மனியும் டன்டன்னாக குப்பையை கப்பல்களில் கொண்டு வந்து வட கொரியாவில் போட்டது. இதில் கதிரியக்கம் மிக்க குப்பைகளும் கலந்திருப்பதுதான் கவலைக்குரிய விஷயம். இதையெல்லாம் எதிர்ப்பதற்கு எந்தப் பசுமை இயக்கமும் வட கொரியாவில் இல்லை.

உள்நாட்டிலேயே அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்கியது வட கொரியா. அது மட்டுமல்ல அணு ஆயுத தடுப்பு தொடர்பான எந்தவித ஒப்பந்தத்திலும் எந்த நாட்டுடனும் கையெழுத்திட மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தது. அப்போதிலிருந்தே விதவிதமான பொருளாதாரத் தடைகளை அது பல நாடுகளிலிருந்து சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது.

அக்டோபர் 2012-ல் வட கொரியா ஓர் அறிவிப்பைச் செய்தது. ‘‘எங்களிடம் மிகச் சிறந்த ஏவுகணைகள் உள்ளன. அவை அமெரிக்காவையே அடைந்து அழிக்கும் ஆற்றல் பெற்றவை’’. இந்த நிலையில்தான் 2012 டிசம்பரில் வட கொரியா செயற்கைக்கோள் ஒன்றை வானில் செலுத்தியதும் அதற்கு எழுந்த கண்டனங்களும்.

வட கொரியாவின் உடனடித் தேவைகளில் ஒன்று பெட்ரோல். தொடக்கத்தில் கொரிய நாணயத்தைப்பெற்றுக் கொண்டு பெட்ரோல் சப்ளை செய்து வந்த ரஷ்யா, சோவியத் துண்டாடப்பட்ட பிறகு ‘தங்கத்துக்குப் பதிலாகத்தான் பெட்ரோல்’ என்று நிபந்தனை விதித்து விட்டது. தங்கத்தைக் கொண்டு போர்க் கருவிகள் போன்ற ‘உபயோகமான’ பொருள்களை வாங்கத்தான் வட கொரியாவுக்கு விருப்பம். கொஞ்ச காலத்துக்கு பெட்ரோல் வழங்கிய அமெரிக்காவும் சப்ளையை நிறுத்திக் கொண்டு விட்டது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வட கொரியாவில் நிறைய மனித உரிமை மீறல்கள் நடப்பதாக ஐ.நா. விசாரணைக் குழு கூறியதுடன் இதற்கு வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்-தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியதில் அதிபருக்குக் கடும் எரிச்சல்.

புதிதாகப் புறப்பட்டிருக்கும் புதிய ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜப்பானின் அறிக்கை மேற்படி விசாரணைக் குழுவின் அறிக்கையை வழிமொழிவதோடு அதை சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்து வழக்கு தொடர வேண்டும் என்றும் கூறியிருந்தது.

ஆனால் இப்படி ஏதாவது நடந்தால் அதை சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்துவிடும் என்பது உண்மை. என்றாலும் பழைய கதை தோண்டியெடுக்கப்படுவது வட கொரியாவின் தலைமையை எரிச்சல்பட வைத்துள்ளது.

அக்டோபர், 2014-ல் வட கொரியா விடுத்த அழைப்பு பல உலக நாடுகளுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அந்த அழைப்பு ஐரோப்பிய யூனியனுக்கு. ‘உங்கள் பிரதிநிதி எங்கள் நாட்டுக்கு தாராளமாக வந்து பார்க்கலாம்’’ என்றது வட கொரியா. மனித உரிமை குறித்த பேச்சுவார்த்தை 2013-ல் தடைபட்டுப் போயிருந்தது. இது தொடரப் போகிறது என்பதில் ஐரோப்பிய யூனியன் நேரடியாகவும், ஐ.நா. சபை மறைமுகமாகவும் மகிழ்ந்தன. ஐரோப்பிய யூனியன் இந்த அழைப்பை கொஞ்சம் சந்தேகத்துடன் ஏற்றுக் கொண்டது.

உலகின் பல நாடுகளில் கம்யூனிஸம் வலிமையை இழந்ததும் வட கொரியாவுக்கு சிக்கலைத் தோற்றுவித்தது. தவிர தனது வருமானத்தில் பெரும் பகுதியை ராணுவத்துக்கே செலவழிக்க வேண்டிய கட்டாயம் வேறு அதற்கு. இத்தனை பிரச்னைகளையும் வட கொரியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in