உலக மசாலா: ராட்சச முத்து!

உலக மசாலா: ராட்சச முத்து!
Updated on
1 min read

உலகிலேயே மிகப் பெரிய முத்து பிலிப்பைன்ஸில் கிடைத்திருக்கிறது. 34 கிலோ எடை கொண்ட இந்த ராட்சச முத்து சுமார் ரூ.670 கோடி மதிப்பு கொண்டது! புயர்டோ பிரின்செஸ்கா நகரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு மீனவர் ஒருவருக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் அந்த மீனவருக்கு இது முத்து என்றோ, அது விலை மதிப்புமிக்கது என்றோ தெரியவில்லை. அதிர்ஷ்ட கல்லாக நினைத்து, தன் மர வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்தார்.

சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடு எரிந்து போனது. ஆனால் முத்தை மட்டும் பத்திரமாக மீட்டெடுத்தார் மீனவர். வீடுகளைப் பார்வையிட வந்த அதிகாரிகளிடம் முத்தை ஒப்படைத்தார். 6.4 கிலோ எடை (ரூ.234 கோடி) கொண்ட ஒரு முத்துதான் இப்போது உலகின் மிகப் பெரிய முத்தாக இருந்து வருகிறது. “இதன் மதிப்பு முறையாக கணக்கிடப்பட்டவுடன், உலகின் மிகப் பெரிய, மதிப்புமிக்க முத்தாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அதற்குப் பிறகு புயர்டோ பிரின்செஸ்கா நகரம் உலகின் மிகப் பெரிய இயற்கை முத்து வைத்திருக்கும் நகரம் என்ற சிறப்பைப் பெறும்” என்கிறார் ஓர் அதிகாரி.

ரூ.670 கோடியில் அந்த மீனவருக்கும் ஏதாவது வழங்கக்கூடாதா?

அமெரிக்காவின் ப்ரூக்ளின் நகரில் வசிக்கிறார் மாடல் சம்மர் ரேன் ஓக்ஸ். கடந்த 11 ஆண்டுகளாக தான் வசித்து வரும் 1,200 சதுர அடி கொண்ட வீட்டை, தோட்டமாக மாற்றிவிட்டார். சமையலறை, படுக்கை அறை, கூடம், குளியலறை, கழிவறை, பால்கனி, நூலக அறை என்று எங்கும் விதவிதமான செடிகள் செழித்து வளர்ந்திருக்கின்றன! ஜன்னல், கூரை, சுவர்கள் என்று எங்கெங்கும் செடிகள்தான். இதில் உணவுக்கு பயன்படுத்தக்கூடிய தாவரங்களும் அழகுக்கு வளர்க்கப்படும் தாவரங்களும் இருக்கின்றன. “நான் இதற்கு முன்பு பென்சில்வேனியாவில் வசித்தேன். அங்கே 5 ஏக்கர் நிலத்தில் செடி, மரம், கொடிகளுக்கு நடுவே வாழ்ந்தேன். ஆனால் மாடலாக மாறியவுடன் நியூயார்க் வர வேண்டியதாகிவிட்டது. அதனால் எனக்கு ஏற்ற சூழலை உருவாக்கிக் கொண்டேன். ஒரு மாடலாக இருந்தாலும் என் ஆர்வம் எல்லாம் சுற்றுச்சூழலில்தான் இருக்கிறது.

18 வயதில் இருந்து செடிகள், மரங்களை வளர்த்து வருகிறேன். சூழலியல் பயிற்சி பெற்றிருக்கிறேன். சுற்றுச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். நான் சாப்பிடும் உணவுப் பொருட்கள் முதல் அணியும் ஆடை வரை சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறேன். என் வீட்டுக்குள் சுமார் 500 செடிகள் இருக்கின்றன!

தினமும் ஒரு மணி நேரம் செலவிட்டு, தண்ணீர் விடுகிறேன். வாரத்துக்கு ஒருமுறை இயற்கை உரமிடுவேன். நான் வீட்டுக்குள் நுழையும் ஒவ்வொரு தடவையும் இந்த பசுஞ்சோலை எனக்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறது. என் வீட்டுக்கு வருகிறவர்களும் இதைத்தான் சொல்கிறார்கள். அவர்களும் தங்கள் வீடுகளில் சில செடிகளையாவது வளர்க்க ஆரம்பிக்கிறார்கள்” என்கிறார் சம்மர் ரேன் ஓக்ஸ்.

அட! வீட்டுக்குள்ளே பசுஞ்சோலை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in