

அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆட்சியில் அமெரிக்க, இந்திய உறவு மேலும் வலுவாகும் என்று வெள்ளை மாளிகை செய்தித் துறை செயலாளர் சீன் ஸ்பைசர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வாஷிங்டனில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் தொலைபேசியில் பேசினார். இரு தலைவர்களின் தொலைபேசி உரையாடல் ஆக்கப்பூர்வமாக அமைந்தது. அதிபர் ட்ரம்பின் ஆட்சி நிர்வாகத்தில் அமெரிக்க, இந்திய உறவு மேலும் வலுவடையும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை இந்தியா கோரி வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்குமா என்று சீன் ஸ்பைசரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.