

பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வீஸ் முஷாரப், தமது ஆட்சிக்காலத்தில் நடந்த தவறுகளை பொறுத்துக்கொண்டு மன்னிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனக்கெதிரான எல்லா வழக்கு களையும் எதிர்கொள்வேன் என்றும் நாட்டை விட்டு கோழை போல தப்பி ஓடமாட்டேன் என்றும் உறுதி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறிய தாவது:
நான் ஆட்சியில் இருந்தபோது செய்தது எல்லாமே நாட்டின் நலனுக்காகவேதான். நல்ல எண்ணத்தில் செய்த செயல்கள் சில தவறாக முடிந்திருக்கலாம். அந்த தவறுகளுக்கு நான் பொறுப்பு ஏற்கிறேன். நடந்த தவறுகளை பொறுத்துக்கொண்டு எனக்கு மன்னிப்பு வழங்க வேண்டும்.
தேசத்துரோகம் உள்பட எத்தகைய குற்றச்சாட்டும் என்மீது சுமத்தட்டும், எத்தனை வழக்கு தொடுத்தாலும் அதற்கெல்லாம் அஞ்ச மாட்டேன். நாட்டை விட்டு தப்பி ஓடமாட்டேன். நான் கோழை மனிதன் அல்ல.
பொருளாதாரத்தை மீட்டெடுப்பதும் பயங்கரவாதத்தை எதிர்கொண்டு ஒழிப்பதும்தான் நாடு எதிர்நோக்கும் இப்போதைய மிக முக்கிய சவால்கள்
தலிபான்கள் மற்றும் பிற பயங்கரவாத இயக்கங்களுடன் அரசு பேச்சு நடத்துவதில் தவறில்லை. இப்போதைய நிலையில் நாம் பலவீனமாகவே இருக்கிறோம். இப்படிப்பட்ட நிலையில்தான் பேச்சு நடக்கிறது. எங்கள் உயிரை பறிக்க வேண்டாம் என்று அவர்களிடம் கெஞ்சு வது சரியானதாக தெரியவில்லை. பேச்சு வார்த்தையை அரசு விரும்புகிறது. தலிபான்களோ பேச்சு வார்த்தையை விரும்பவில்லை என்கிறார்கள். அரசுக்கு மரியாதையே இல்லை. எனவே அரசு தனது அதிகாரம், பலத்தை காட்ட வேண்டும்.
பாதை மாறி சென்ற தலிபான்களும் பிற பயங்கரவாத இயக்கத்தவர்களும் நமது மக்கள்தான். நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் என்றால் பயங்கர வாதத்தை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே முதலீடுகள் வரும் தொழிற்சாலைகள் பெருகும்.
நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் அரசு சர்வ தேச செலாவணி நிதியத்திடம் நிதி உதவிக்காக பிச்சை கேட்டு ஏந்தி நிற்கிறது. பிச்சை கேட்பவர்களுக்கு உலகில் மரியாதை கிடையாது. நாட்டில் புரையோடிப்போயுள்ள ஊழல், நிர்வாக முறைகேடுகளை அகற்றி அனைத்தையும் சரி செய்யவேண்டும்.
எதிர்காலத்தில் எனக்கு நாட்டை ஆளும் வாய்ப்பு கிடைத்தால் நாட்டின் நலன் சார்ந்த எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்றார் முஷாரப்.
இஸ்லாமாபாத்தில் உள்ள தனது பண்ணை இல்லத்தில் 8 மாதங்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள முஷாரப் இப்போதுதான் முதல் முறை யாகப் பேட்டி கொடுத்திருக்கிறார்.
முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ கொலை வழக்கு உள்ளிட்ட 4 முக்கிய வழக்குகளில் ஜாமீன் பெற்றுள்ள முஷாரப் மீது, 2007ல் நாட்டில் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தியதற்காக தேசத் துரோக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது பற்றி சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.