

பாகிஸ்தான் சிறையில் இருந்த இந்திய கைதி சரப்ஜித் சிங்கை (49) அடித்துக் கொலை செய்த வழக்கில் அந்நாட்டின் 2 மரண தண்டனைக் கைதிகள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
லாகூரில் உள்ள கோட் லக்பத் மத்திய சிறையில் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, அமீர் சர்ஃப்ராஸ் என்ற தம்பா மற்றும் முடாசார் பஷீர் ஆகிய 2 கைதிகள் மீது முறைப்படி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்களிடம் குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நீதிபதி சையது அஞ்சும் ரஸா சையது, வரும் 20-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் சாட்சிகளை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையை முன்னிட்டு பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டிருந்ததாகவும் இது தொடர்பான புலனாய்வை போலீ ஸார் முடித்துவிட்டதாகவும் சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக இந்திய மற்றும் பாகிஸ்தான் கைதிகளிடம் ஏற்கெனவே வாக்குமூலம் பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும், அவர்களை சாட்சிகளாக நீதிமன்றத்தில் போலீ ஸார் ஆஜர்படுத்த உள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
தவறுதலாக எல்லை தாண்டி சென்ற சரப்ஜித் சிங்கை பாகிஸ்தான் போலீஸார் கைது செய்தனர். பின்னர் 14 பேரை பலி வாங்கிய பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பதாகக் கூறி சரப்ஜித் சிங்குக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
ஆனால் சரப்ஜித் சிங்குக்கு குண்டுவெடிப்பில் எவ்விதத் தொடர்பும் இல்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்த போதிலும் அதை ஏற்கவில்லை. கருணை மனுவையும் அந்நாட்டு முன்னாள் அதிபர் முஷாரப் நிராகரித்து விட்டார்.
எனினும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான அரசு, 2008-ல் சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்தது. இந்நிலையில், சிறையில் இருந்த அவரை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சக கைதிகள் சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி மே 2-ம் தேதி இறந்தார்.