

சிரிய தலைநகர் டமாஸ்கஸில் அமைந்துள்ள ரஷ்ய தூதரகம் மீது அரசு எதிர்ப்புப் படை பீரங்கி குண்டுகளை வீசியது. இதில் தூதரக ஊழியர்கள் 3 பேர் காயமடைந்தனர்.
டமாஸ்கஸ் அருகில் உள்ள மாஸே பகுதியில் இருந்து அல்-காய்தா ஆதரவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
ரசாயன ஆயுத தாக்குதல் விவகாரத்தைக் காரணம் காட்டி சிரியா மீது போர் தொடுக்க அமெரிக்கா ஆயத்தமாகி வந்த நிலையில், ரஷ்ய தலையீட்டால் போர் தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக, அமெரிக்கா- ரஷ்யா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சிரியாவில் உள்ள ரசாயன ஆயுதங்களை அழிக்க அண்மையில் உடன்பாடு எட்டபட்டது.
இந்நிலையில், ரஷ்ய தூதரகத்தை குறிவைத்து ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அங்கு மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாரோவ், சிரியா விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை கடுமையாகக் குற்றம் சாட்டினார்.
ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தில், சிரிய அரசு ரசாயன ஆயுதங்களை அழிக்கத் தவறினால் அந்த நாட்டின் மீது போர் தொடுக்க வகைசெய்யும் பிரிவைச் சேர்க்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் மும்முரம் காட்டுகின்றன. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதுகுறித்து, மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய செர்ஜி லாரோவ், சிரிய அதிபர் பஷார் அல்-அஸாத் ஆட்சியை அகற்றுவது மட்டுமே அமெரிக்காவின் நோக்கமாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா சர்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டு வருகிறது என்று குற்றம்சாட்டினார்.
அமெரிக்கா கண்டனம்
இதனிடையே, ரஷ்ய தூதரக தாக்குதல் சம்பவத்துக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து ள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, தாக்குதலை நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.