

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை என்ற கனவு வடகொரியாவுக்கு நிறைவேறாது என்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் யுன் தனது புத்தாண்டு தொலைக்காட்சி உரையில், அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை சோதனையின் கடைசி கட்டங்களில் வட கொரியா உள்ளது என்று கூறியிருந்தார்.
இதனை எதிர்த்து ட்வீட் செய்த டொனால்ட் ட்ரம்ப், “வடகொரியாவின் அணு ஆயுத ஏவுகணைச் சோதனை நடக்காது” என்று கூறியுள்ளார்.
அதாவது வடகொரியாவினால் இதனைச் செய்ய முடியாது என்று ஐயமாகக் கூறினாரா அல்லது அதனை முறியடிப்போம் என்ற தொனியில் கூறினாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மீண்டும் சீனாவைத் தாக்கிய ட்ரம்ப், “ஒருதலைபட்சமான வர்த்தகத்தில் அமெரிக்காவிடமிருந்து சீனா பெரிய அளவில் செல்வங்களை எடுத்துச் சென்று வருகிறது. ஆனால் வடகொரியாவை தடுப்பதற்கு உதவிபுரிவதில்லை... நைஸ்” என்று ட்வீட் செய்துள்ளார்.
வடகொரியாவை அணு ஆயுத நாடாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று அமெரிக்கா திட்டவட்டமாக இதுவரை தெரிவித்து வந்தாலும் முதல் முறையாக ட்ரம்ப் தனது கருத்தைத் தெளிவாக்கியிருப்பது தற்போது கவனம் பெறுகிறது.
வடகொரிய அதிபர் யுன், “வடகொரியா தற்போது கிழக்கின் மிகப்பெரிய ராணுவ சக்தியாகும், வலுவான விரோதி கூட இனி நம்மை தொட முடியாது” என்ரு கூறியதற்கு ட்ரம்ப் பதில் அளித்துள்ளதாகவே தெரிகிறது