

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று ஆஸ்திரேலியா சென்றடைந்தார். ஜி20 மாநாட்டில் வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் குவிவதை தடுக்க சர்வதேச ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தி பேச மோடி முடிவு செய்துள்ளார். ஜி20 மாநாடு பிரிஸ்பேன் நகரில் இன்று தொடங்குகிறது.
சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் இந்திய பிரதமர் ஒருவர் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். இதற்கு முன்பு 1986-ல் ராஜீவ் காந்தி, பிரதமராக இருந்தபோது ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.
ஜி20 மாநாடு இருநாட்கள் நடைபெறுகிறது. அதன் பிறகு மேலும் 3 நாட்கள் மோடி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அந்நாட்டு தலைநகர் கான்பெர்ராவில் பிரதமர் டோனி அபோட்டை வரும் செவ்வாய்க்கிழமை மோடி சந்தித்துப் பேச இருக்கிறார். சிட்னி, மெல்போர்ன் நகரங்களுக்கும் அவர் செல்ல இருக்கிறார்.
முன்னதாக மியான்மர் பயணத்தை முடித்துக் கொண்ட மோடி நேற்று ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் பிரிஸ்பேன் சென்றடைந்தார். விமான நிலையத்தில் ஆஸ்திரேலிய அரசு சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜி20 மாநாடு குறித்து பேசிய மோடி, கருப்புப் பணத்துக்கு எதிராக சர்வதேச ஒத்துழைப்பின் அவசியத்தை மாநாட்டில் வலியுறுத்துவேன். நவீன உள் கட்டமைப்பு வசதிகள், டிஜிட்டல் மயமாதல், வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்டவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறேன் என்றார்.
ஜி20 மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் மோடி சந்தித்து பேச இருக்கிறார். இதில் முதல் கட்டமாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஹெர்மன் ஆகியோரை மோடி சந்தித்து பேசினார்.
ஆஸ்திரேலிய மாணவர்களுடன் மோடி
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.அந்த விழாவில் நேருவுக்கு மரியாதை செலுத்திய மோடி குழந்தைகள் தின வாழ்த்தையும் தெரிவித்தார். அப்போது மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
அறிவியல் ஆராய்ச்சிகள்தான் வளர்ச்சிக்கு வித்திடுகின்றன. ஆராய்ச்சிகள் பெருகினால்தான் மனித குலம் முன்னேறும். குறிப்பாக வேளாண் துறையில் ஆராய்ச்சிகள் அதிகரிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
2008-ம் ஆண்டில் தொடங்கப் பட்ட ஜி20 அமைப்பில் இந்தியா, ஆர்ஜெண்டீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவூதி அரேபியா, தென்னாப் பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் அமைப்பு ஆகியவை இடம் பெற்றுள்ளன. இது பொருளா தார சக்தி மிகுந்த நாடுகளை உள்ளடக்கியதாகும்.
இந்திய வரைபடத்தில் தவறு
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப கல்லூரியில் நேற்று நடைபெற்ற விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அங்கு வைக்கப்பட் டிருந்த இந்திய வரை படத்தில் காஷ்மீர் பகுதி குறிப்பிடப்படவில்லை. இதனை கவனித்த இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கடும் கண்டனம் தெரிவித்தார். அதற்கு அவர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கோரினர்.