

ஆஸ்திரேலியாவில் 10 லட்சத்து 20 ஆயிரம் வண்ண மின் விளக்கு தோரணங்கள் தொங்கவிடப்பட்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சுமார் ஒரு மாத காலம் உள்ள நிலையில் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இப்போதிருந்தே பொதுமக்கள் பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெர்ராவில் உள்ள வழக்கறிஞர் டேவிட் ரிச்சர்ட், கிறிஸ்துமஸின் போது அலங்கரிக்கப்படும் வண்ண மின் விளக்குகள் மூலம் சாதனை படைக்க முடிவு செய்தார்.
அவரது முயற்சியின் மூலம் கான்பெர்ராவில் உள்ள ஒரு வணிக வளாகம் 10 லட்சத்து 20 ஆயிரம் மின் விளக்குகளால் ஜொலிக்கத் தொடங்கியுள்ளது. இவை அனைத்துமே “எல்இடி பல்புகள்”. தனியார் மின் நிறுவனம் ஒன்று இந்த சாதனைக்கு இலவசமாக மின்சாரம் கொடுத்து உதவியுள்ளது. உள்ளூர் தன்னார்வ தொண்டர்களின் உதவியுடன் வணிக வளாகம் உள்ள பகுதி முழுவதுமே வண்ண மின் விளக்குகளால் ஜொலித்து வருகிறது.
இதற்கு முன்பு சுமார் 5 லட்சம் வண்ண மின் விளக்குகள் ஒரே நேரத்தில் ஏற்றப்பட்டதுதான் சாதனையாக இருந்தது. இந்த சாதனை கடந்த ஆண்டு கான்பெர்ரா நகரில்தான் நிகழ்த்தப்பட்டது.