

ரஷியாவில், ரஷியர் ஒருவரை வெளிநாட்டைச் சேர்ந்தவர் கொலை செய்து விட்டதால், அங்கு பெரும் போராட்டம் வெடித்துள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரஷியா ரஷியர்களுக்கே எனக் கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட 1,200க்கும் மேற்பட்டவர்களை கலவர தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிர்யுலோவோ மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை 25 வயது ரஷிய இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளி காகஸஸ் எனப்படும் மத்திய ஆசியாவைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஆத்திரமுற்ற ரஷிய இளைஞர்கள் ரஷியா ரஷியர்களுக்கே என்ற கோஷத்துடன் கருப்பு உடை அணிந்தபடி போராட்டத்தில் குதித்துள்ளனர். கொலையாளி மறைந்திருப்பதாகச் சந்தேகப்படும் காய்கறி சந்தைப் பகுதியை அவர்கள் அடித்து நொறுக்கினர்.
காகஸஸ் பகுதியில் தெற்கு ரஷியாவும் உள்ளடங்கும்.
மாஸ்கோ சுற்றுப்பகுதியில் உள்ள காய்கறிச் சந்தைகளில் தெற்கு ரஷியாவைச் சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாகவே ரஷியர்களுக்கும் வடக்கு காகஸஸ் மக்களுக்கும் இடையே மோதலான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், ரஷிய இளைஞரின் கொலை அங்கு அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான ரஷியர்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். சில பகுதிகளில் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 1,200க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு கைது செய்யும் போது, 5 போலீஸார் காயமடைந்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபராக புதின் 2012 மே மாதம் பதவியேற்ற பிறகு இது போன்ற சம்பவம் நடைபெறவில்லை. இந்தச் சம்பவம் தங்களை அதிர்ச்சியடையச் செய்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.