

சந்திரனில் இறங்கி நிலப்பரப்பை ஆய்வு செய்வதற்காக முதன்முறையாக ஆளில்லா விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பி உள்ள சீனா, விண்வெளித் துறையில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளது.
ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து 56.4 மீட்டர் நீளம் கொண்ட 'சாங் இ-3' ராக்கெட்டை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இதில், யுடு (ஜேட் ராபிட்) என்ற விண்கலம், டெலஸ்கோப் மற்றும் ஒரு ரோபோட்டிக் லேண்டர் ஆகியவை இருக்கும். இந்த மாத மத்தியில் சந்திரனில் தரை இறங்கவுள்ள இது, அங்குள்ள நிலப்பரப்பை ஆய்வு செய்வதுடன், இயற்கை வளங்கள் குறித்தும் ஆய்வு செய்யும். இந்த விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சீன விஞ்ஞானிகள், விண்வெளி ஆய்வுத் துறையில் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் மங்கள்யான் ஆய்வுக்கலம், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புவி வட்டப் பாதையிலிருந்து வெளியேறி செவ்வாய் கிரகத்தை நோக்கி தனது 300 நாள் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், சீனா சந்திரனுக்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.