

கலவர வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்பும் இந்தியரை நாடு கடத்த சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டு, அவரை தாய்நாட்டுக்கு அனுப்பிவிட்டது. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் டிசம்பர் 8-ம் தேதி பஸ் மோதியதில் சக்திவேல் குமாரவேல் என்பவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்து 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
56 இந்தியர்கள் உள்பட 57 பேர் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப் பட்டுள்ளனர். 200 பேருக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அறிவுரை வழங்கப்பட்டு, தொடர்ந்து சிங்கப்பூரில் பணிபுரிய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
நாடு கடத்தப்பட்ட 57 பேரில் ஒருவரான ராஜேந்திரன் ரஞ்சன் (22) சார்பில் வழக்கறிஞர் எம்.ரவி சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
“ரஞ்சன் உள்ளிட்ட 7 பேர் தனியார் பஸ்ஸின் கண்ணாடிகளை உடைத்தனர் என்று முதலில் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அவர்கள் மீதான குற்றச்சாட்டை அரசு தரப்பு வழக்கறிஞர் பின்னர் வாபஸ் பெற்றார். இதைத் தொடர்ந்து 7 பேரும் குற்றமற்றவர்கள் எனக் கூறி மாவட்ட நீதிபதி லிம் சே காவ் விடுவித்துவிட்டார்.
எனினும், அந்த 7 பேரில் ரஞ்சன் உள்பட 4 பேரை தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை போலீஸார் அழைத்துச் சென்றனர்.
ரஞ்சனை தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பும் உத்தரவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்போவதாக குடியேற்றத்துறை அதிகாரிகளிடம் எழுத்துபூர்வமாக தெரிவித்தேன். ரஞ்சனை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரினேன். ஆனால், அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ரஞ்சனை இந்தியாவுக்கு அனுப்பிவிட்டனர்.
குடியேற்றத்துறை சட்டம் பிரிவு 33(2)-ன் படி நாடு கடத்துவதற்கான உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் உரிமை ரஞ்சனுக்கு உள்ளது. ஆனால், அதற்கான வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
எனவே, இது தொடர்பாக விசாரித்து அவரை நாடு கடத்தியதற்கான உத்தரவை ரத்து செய்ய வேண்டும். சிங்கப்பூரில் பணிபுரிவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.