

ஏ.கே.47 ரக துப்பாக்கியை உருவாக்கிய ரஷ்யாவின் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் மிகைல் கலாஷ்னிகோவ் மரணமடைந்தார். அவருக்கு வயது 94.
கலாஷ்னிகோவ் மறைவையொட்டி, சமூக வலைத்தளமான ட்விட்டரில் உலக அளவில் அவருக்கு புகழாஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
உலக அளவிலும், இந்திய அளவிலும் மிகைல் கலாஷ்னிகோவ் (Mikhail Kalashnikov) பெயர் டிரெண்டிங்கில் நீடித்து வருகிறது. அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் அதேவேளையில், ஏ.கே.47 ரக துப்பாக்கி, சமூகத்தைக் காக்கவும் அழிக்கவும் வகித்த பங்கு குறித்து இணையவாசிகளால் விவாதிக்கப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் இயந்திரத் துப்பாக்கி ஏ.கே.47. இதுவரை 10 கோடிக்கும் அதிகமான ஏ.கே.47 துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு விற்பனையாகியுள்ளன. இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில் இத்துப்பாக்கியை வடிவமைக்கத் தொடங்கிய அவர் போர் முடிந்த பின்பு அதனை முழுமையாக்கினார்.
1949-ம் ஆண்டு சோவியத் ரஷ்ய ராணுவத்தில் அதிகாரப்பூர்வமாக இத்துப்பாக்கி பயன்பாட்டு வந்தது. மிகவும் நவீனமானது, பயன்படுத்த எளிதானது, குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டாலும், நீண்டநாள்கள் உழைக்கக் கூடியது என்பதால் இத்துப்பாக்கி சர்வதேச அளவில் எளிதில் பிரபலமானது.
கலாஷ்னிகோவின் ஆட்டோமேட்டிங் துப்பாக்கி 1947-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது என்பதை உணர்த்தும் வகையிலேயே அத்துப்பாக்கிக்கு ஏ.கே.47 என்று பெயரிடப்பட்டது.
கலாஷ்னிகோவ்வின் 90-வது பிறந்த நாளின்போது மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகையில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது பேசிய கலாஷ்னிகோவ், எனது கண்டுபிடிப்பான ஏ.கே.47 துப்பாக்கி சமூக விரோதிகள், பயங்கரவாதிகளால் அப்பாவிகளைக் கொல்ல பயன்படுத்தப்படுவதைக் கேள்விப்படும்போது மிகவும் வேதனை ஏற்படுகிறது. நம் நாட்டின் எல்லையைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இத்துப்பாக்கியை வடிவமைத்தேன். ஆனால் இப்போது அது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆட்சியாளர்களின் தவறும் அதிகம் உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
கலாஷ்னிகோவ்வின் இளம் வயது வாழ்க்கை மிகவும் சோகமானதாகவே இருந்தது. அவரது தந்தை சிறுவயதிலேயே மரணமடைந்துவிட்டார். போர் காலத்தில் கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கலாஷ்னிகோவ், போரில் படுகாயமடைந்ததால் சிறிது காலம் ஓய்வில் இருந்தார்.
பின்னர், ராணுவத்துக்கான ஆயுதங்கள் தயாரிக்கும் பிரிவில் பணியாற்றினார். அப்போதுதான் நவீன இயந்திரத் துப்பாக்கியை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது முதல் முயற்சியில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ரஷ்ய ராணுவத்தால் நிராகரிக்கப்பட்டாலும், ஏ.கே.47 அவருக்கு சர்வதேச அளவில் புகழைப் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.