

மலேசியாவின் சபா மலையின் காட்டுக்குள் இருக்கிறது கண்களைக் கவரக்கூடிய இந்தக் கால்பந்து மைதானம். நான்கு பக்கங்களிலும் இருக்கும் வேலிகளைச் சுற்றி அடர்த்தியான செடிகளும் கொடிகளும் ஆக்கிரமித்துள்ளன. கதைகளில் வரும் அற்புத உலகங்களில் இருக்கும் மைதானம் போன்ற தோற்றத்தை அளிக்கிறது! லாங்கோன்கோன் பள்ளியின் ஆசிரியர், இந்த மைதானத்தைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார். “இப்படி ஓர் இடத்தை யாரும் நேரில் பார்த்திருக்க முடியாது. இயற்கையின் எழிலைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. வெயில் காலத்தில் கூட இந்த மைதானம் குளுகுளுவென்று இருப்பதற்கு இந்தத் தாவரங்களே காரணம். தூய்மையான காற்றும் இதமான குளிரும் விளையாடுபவர்களுக்குப் புத்துணர்வை அளிக்கின்றன. எங்கள் மாணவர்கள் 15 நிமிடங்களில் மலையேறி, மைதானத்தை அடைந்துவிடுவார்கள். வாகனங்களில் சென்றால் 3 மணி நேரமாகும்” என்கிறார் ஆசிரியர்.
உலகின் பசுமையான கால்பந்து மைதானம்!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் நடிகை பில்லர் ஓலேவ். 30 வயதாகும் அவர் கடந்த நான்கு ஆண்டுகளாகக் கடுமையான ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை இழந்திருக்கிறார். உணவு, தண்ணீர், துணி, மனிதர்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் என்று ஒவ்வாமை தரக்கூடிய பட்டியல் நீண்டுகொண்டே இருந்தது. இதனால் அவரால் சாப்பிட முடியவில்லை, வெளியில் செல்ல முடியவில்லை. ஓர் அறைக்குள் முடங்கிக் கிடந்தார். “திடீரென்று என்னால் வசனங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் போனது. அதைத் தொடர்ந்து தலைவலி, மூக்கடைப்பு, மார்பு இறுக்கம் போன்றவை ஏற்பட்டன. என் கணவரும் ஒரு கட்டத்தில் அலர்ஜியாகிப் போனார். வேகமாக எடை குறைந்தேன். என் பார்வையும் குறைந்தது. பல்வேறு மருத்துவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு நான் ஒரு புரியாத புதிராக மாறினேன். எந்த மருத்துக்கும் நோய் கட்டுக்குள் வரவில்லை. மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் நிலைமை மோசமடைந்துவிடும். ஒரு மருத்துவர் வீட்டிலுள்ள என் அறையைப் பார்க்க வேண்டும் என்றார். அவர்தான் அறையிலிருந்த ஒரு குழாயிலிருந்து நச்சு வாயு வெளியேறிக்கொண்டிருக்கிறது என்பதையும் அதை 24 மணி நேரமும் சுவாசிப்பதால் எனக்கு இந்த அலர்ஜி வந்துவிட்டதாகவும் கண்டுபிடித்தார். கடந்த ஓராண்டு முழுவதும் மருத்துவமனையில் இருந்து, 24 மணி நேரமும் சுத்தமான காற்றை சுவாசித்து, மருந்துகளை எடுத்துக்கொண்டேன். இப்போது ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. நடக்கிறேன், பேசுகிறேன். சில உணவுகளை உடல் ஏற்க ஆரம்பித்திருக்கிறது. ஆனாலும் இன்னும் அலர்ஜி அளிக்கக்கூடிய விஷயங்கள் அதிகமாகவே இருக்கின்றன. நான் முழுவதுமாகக் குணமடைய இன்னும் பல வருடங்கள் ஆகலாம். விரைவில் சாதாரண வாழ்க்கையை மீண்டும் வாழ்வேன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. ஒரு கவனக் குறைவு உயிருக்கே ஆபத்தாக அமைந்ததோடு, சமாளிக்க முடியாத அளவுக்குச் செலவையும் இழுத்து வைத்துவிட்டது” என்கிறார் பில்லர். இவருக்குச் சிகிச்சையளிக்கும் டெக்ஸாஸ் மருத்துவமனை, இதுபோன்ற ஒரு நோயாளியை முதல்முறை சந்தித்திருப்பதாகக் கூறுகிறது.
காரணத்தைக் கண்டுபிடித்த டாக்டருக்கு நன்றி!