

காந்தியின் வாழ்வையும் அவரது போதனைகளையும் பின்பற்றினால் உலகம் எதிர்கொண்டுள்ள பெரிய சவால்களான பயங்கரவாதம், புவி வெப்பமயமாதல் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு கிட்டும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நிறுவப்பட்ட மகாத்மா காந்தி சிலையை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
காந்தி சிலையை திறந்து வைத்துப் பேசிய பிரதமர் மோடி, "1869-ம் ஆண்டு அக்டோபர் 2-ல் போர்பந்தரில் பிறந்தது மகாத்மா காந்தி மட்டுமல்ல ஒரு புதிய சகாப்தமும்தான்" என்றார்.
அவர் மேலும் பேசியதாவது: "1869-ம் ஆண்டு அக்டோபர் 2-ல் போர்பந்தரில் பிறந்தது மகாத்மா காந்தி மட்டுமல்ல ஒரு புதிய சகாப்தமும்தான். காந்திய சிந்தனைகள் இன்றைக்கும் மிக பொருத்தமாக இருப்பதாக நான் முழுமையாக நம்புகிறேன். அவர் போதித்த அன்பும், அஹிம்சையும் இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்தும்.
உலகம் இரு பெரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. ஒன்று பயங்கரவாதம், மற்றொன்று புவி வெப்பமயமாதல். இந்த இரு பெரும் அச்சுறுத்தல்கள் குறித்து ஜி-20 மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் ஆலோசித்துள்ளனர். காந்தியின் வாழ்வையும் அவரது போதனைகளையும் பின்பற்றினால் உலகம் எதிர்கொண்டுள்ள பெரிய சவால்களான பயங்கரவாதம், புவி வெப்பமயமாதல் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு கிட்டும்.
காந்தி, வார்த்தைகளால்கூட வன்முறையை கடைபிடிக்கக்கூடாது என வலியுறுத்தினார். அதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். சக மனிதரை மதிக்க வேண்டும். அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். அகிம்சை என்பது இந்தியா பிரிட்டனுக்கு எதிராக போராட பயன்படுத்திய கொள்கை அல்ல. அது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கை நம்முள் ஆழமாக பதியும் போது ஒரு சக்தி ஏற்படும். அப்போது, ஆயுதம் ஏந்தி ஒருவரையொருவர் சுட்டு வீழ்த்தும் துயரம் நிகழாது.
காந்தி இயற்கையை பேண வேண்டும் என்றும் வலியுறுத்தினார். "இயற்கை மனிதனுக்கு எவ்வளவோ வளங்களை வழங்குகிறது. ஆனால், மனிதனின் பேராசைக்கு இயற்கையால் தீணி போட முடியவில்லை" என அவர் கூறியிருக்கிறார். அவரது கொள்கையை பின்பற்றி அளவோடு வளங்களை கையாண்டல் புவி வெப்பமடையாமல் பாதுகாக்கலாம்" இவ்வாறு மோடி பேசினார்.