Published : 27 Sep 2016 10:54 AM
Last Updated : 27 Sep 2016 10:54 AM

உலக மசாலா: குப்பைகளை உடம்பில் கட்டிக்கொள்ளும் மனிதர்!

அமெரிக்காவைச் சேர்ந்த ராப் க்ரீன்ஃபீல்ட், சூழலியலாளர். மனிதர்கள் கொட்டும் குப்பைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு புராஜக்ட்டில் இறங்கியிருக்கிறார். தினமும் அவர் போடும் குப்பைகளை தன் உடலில் சுற்றியுள்ள பைகளில் சேமித்து வந்தார். ‘ஒரு சராசரி அமெரிக்கர் தினமும் 2 கிலோ குப்பைகளைக் கொட்டுகிறார். ஒரு வாரத்தில் 13 கிலோ குப்பைகள், ஒரு மாதத்தில் 63 கிலோ குப்பைகளைக் கொட்டுகிறார். அதை ஆதாரப்பூர்வமாக நிரூபிப்பதற்காகவே என் உடல் மீது குப்பைகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன்.

ஒரு மாதத்தில் என் உடல் எடை அளவுக்குக் குப்பைகள் சேர்ந்துவிட்டன. நான் குடிக்கும் காபி கோப்பைகள், பிளாஸ்டிக் பைகள், பிட்ஸா டப்பாக்கள், சிப்ஸ் பாக்கெட்கள், ஸ்பூன்கள், அஞ்சல் உறைகள் என்று அனைத்துப் பொருட்களையும் சுமந்துகொண்டு அலைந்தேன். பரிசோதனைக்காக என்றாலும் குப்பையுடன் அலைந்தது கடினமாக இருந்தது.

இந்தக் குப்பைகளைப் பூமியில் வீசுவது அதைவிடக் கொடுமையானது. உணவு சேமிப்பு பற்றியெல்லாம் பேசுபவர்கள்கூட குப்பைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இன்னும் சில ஆண்டுகளில் குப்பைப் பிரச்சினை மிகப் பெரியதாக இருக்கப் போகிறது. ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அளவுக்குக் குப்பைகளைக் குறைக்க ஆரம்பிக்க வேண்டும்’ என்கிறார் ராப் க்ரீன்ஃபீல்ட்.

குப்பைகளைக் குறைப்போம்; சூழலைக் காப்போம்!

நிஜ ஓநாய் என்று பார்த்ததும் பயந்து ஓடுபவர்கள்தான் அதிகம். ஆனால் இது பொம்மை என்கிறார் ஜப்பானைச் சேர்ந்த டெருமி ஓடா. நிஜ விலங்குகளைப் போன்றே கம்பளிப் பொம்மைகளை உருவாக்குவதில் நிபுணராக இருக்கிறார். ‘நான் பூக்களும் விலங்குகளும் நிறைந்த இயற்கை எழில்மிக்கப் பகுதியில்தான் பிறந்து, வளர்ந்தேன். இயல்பாகவே கலைகளில் ஆர்வம். பள்ளிப் படிப்பை முடித்தவுடன், லண்டனில் சென்று பூக்கள் அலங்காரத்தைக் கற்றுக்கொண்டு திரும்பினேன். 5 ஆண்டுகளுக்கு முன்புதான் கம்பளியை வைத்து, விலங்குகளை உருவாக்க ஆரம்பித்தேன். நான் என்ன உருவத்தை நினைக்கிறேனோ, அதை என்னால் கம்பளியில் உருவாக்கிவிட முடியும். அதிலும் ஓநாய்க்குக் கிடைத்த வரவேற்பைச் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. பொம்மை என்று நம்புவதற்குக் கஷ்டமாக இருக்கும். பாரிஸ், நியூயார்க், லண்டன் என்று அடிக்கடி கண்காட்சிகளுக்காகப் பறந்துவிடுவதால், ஜப்பானில் குறைவான நேரமே இருக்க முடிகிறது’ என்கிறார் டெருமி ஓடா.

உங்கள் கலைத் திறனுக்கு உலகமே மயங்கிக் கிடக்கிறது!

பிரேஸிலின் பரா பகுதியில் அணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அமேசான் நதிக்கு அருகில் இருக்கும் இந்த இடத்தில், 33 அடி நீளம் கொண்ட மிகப் பெரிய அனகோண்டாவைப் பிடித்திருக்கிறார்கள் கட்டிடத் தொழிலாளர்கள். 400 கிலோ எடையுடன் கூடிய மிகப் பிரம்மாண்டமான அனகோண்டா இது. 25 அடி நீளம் கொண்ட கன்சாஸைச் சேர்ந்த பாம்புதான் இதுவரை மிகப் பெரிய பாம்பு என்று கின்னஸில் இடம் பிடித்திருக்கிறது.

ராட்சச அனகோண்டா!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x