Published : 16 Mar 2017 10:49 AM
Last Updated : 16 Mar 2017 10:49 AM

உலக மசாலா: இமோஜி மலைப் பாம்பு!

ஜார்ஜியாவைச் சேர்ந்த பிராணிகள் வளர்ப்பாளர் ஜஸ்டின் கோபில்கா. 8 ஆண்டுகள் செய்த பரிசோதனைகள் மூலம் ஒரு மலைப் பாம்பின் உடலில் இமோஜி உருவங்களை உருவாக்கிவிட்டார். உயிரினங்களின் நிறத்தையோ, டிசைனையோ மாற்றி அதிக விலைக்கு விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் ஜஸ்டின். இதுவரை அவர் உருவாக்கிய விலங்குகளில் இமோஜி பால் மலைப் பாம்பு அளவுக்கு வியக்க வைத்த விலங்கு எதுவும் இல்லை. அல்பினோ வகையைச் சேர்ந்த வெள்ளை மலைப் பாம்பின் உடலில் மஞ்சள் வண்ண இமோஜிகளை உண்டாக்கி சாதனை படைத்திருக்கிறார். ஆப்பிரிக்க மலைப் பாம்புகளில் இது சிறியது. சாதாரணமாக ஒரு விலங்கை 2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பார். இமோஜி மலைப் பாம்பு 3 லட்சம் வரை விலை போகும் என்றாலும் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என்கிறார் ஜஸ்டின்.

இமோஜி மலைப் பாம்பு!

இத்தாலியைச் சேர்ந்த 57 வயது கேப்ரில்லாவும் 69 வயது லூகி அம்ப்ரோசிஸும் தங்களுக்கு குழந்தை இல்லை என்பதால், ஒரு குழந்தையை தத்தெடுக்க முயன்றனர். இத்தாலிய சட்டப்படி வயதான தம்பதியர் தத்தெடுக்க அனுமதி இல்லை. வேறு வழியின்றி வேறொரு நாட்டுக்குச் சென்று, செயற்கை முறையில் கருத்தரித்து குழந்தை பெற்றனர். 2010-ம் ஆண்டு வயதான தம்பதியர் பெற்ற குழந்தை என்று தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றனர். உறவினர்களும் நண்பர்களும் கடுமையாக எதிர்த்தனர். எதையும் பொருட்படுத்தாமல் குழந்தையை மிகவும் கவனமாகவும் அன்பாகவும் வளர்த்து வந்தனர். 15-வது மாதத்தில் குழந்தையுடன் கேப்ரில்லாவும் லூகியும் வெளியே கிளம்பினர். காரில் ஏறும்போது பால் பாட்டில் எடுத்து வருவதற்காக வீட்டுக்குள் சென்றார் கேப்ரில்லா. போனை எடுப்பதற்காக பின் சீட்டில் குழந்தையை பத்திரமாக வைத்துவிட்டுச் சென்றார் லூகி. பக்கத்து வீட்டுக்காரர்கள் காரில் குழந்தை தனியாக இருந்ததைப் புகைப்படம் எடுத்து, காவல்துறையிடம் புகார் கொடுத்து விட்டனர். வயதான காலத்தில் உங்களால் குழந்தையை சிறப்பாகக் கவனிக்க இயலவில்லை. அதனால் இந்தக் குழந்தையைக் காப்பகத்துக்கு எடுத்துச் செல்கிறோம் என்றார்கள் காவலர்கள். கேப்ரில்லாவும் லூகியும் நிலைகுலைந்து போனார்கள். வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது. “ஒரு குழந்தையை வளர்க்கும் அளவுக்கு உங்களுக்கு தகுதி இல்லை. அதனால் நீங்கள் பெற்ற குழந்தையாக இருந்தாலும் உங்களிடம் கொடுக்க முடியாது. இளம் தம்பதியர் யாருக்காவது குழந்தையை தத்து கொடுத்துவிடலாம். இது பெற்றோருக்கு துயரம் மிகுந்த விஷயம்தான் என்றாலும் குழந்தையின் எதிர்காலம்தான் முக்கியம்” என்று நீதிமன்றம் கூறிவிட்டது. மனம் தளராமல் கேப்ரில்லாவும் லூகியும் தொடர்ந்து மேல் முறையீடு செய்து, 2016-ம் ஆண்டு சாதகமான முடிவை பெற்றனர். ஆனாலும் கடந்த 5 ஆண்டுகளாகக் குழந்தை ஒரு வீட்டில் வளர்ந்து வருகிறாள். அவளை வலுக்கட்டாயமாக மீண்டும் பெற்றோரிடம் கொண்டுவந்தால், அவள் மனநலம் பாதிக்கப்படலாம் என்பதால் குழந்தையைக் கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. 75 வயது லூகியும் 63 வயது கேப்ரில்லாவும் தங்கள் 7 வயது மகளைக் கேட்டு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்து, காத்திருக்கின்றனர்.

பெற்றோருக்கு அநீதி இழைத்த சட்டம்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x