

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (எல்டிடிஇ) தலைவர் பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாக இலங்கையின் தமிழ் தேசியவாதிகள் சிலர் நம்பிவரும் நிலையில், அந்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தில் பிரபாகரனை கண்டுபிடித்து தருமாறு முறையிடத் தயாராக உள்ளேன் என்று தமிழ் தேசிய கூட்டணி தலைவர்களில் ஒருவரும் வடக்கு மாகாண கவுன்சில் உறுப்பினருமான சிவாஜிலிங்கம் கூறினார்.
இலங்கையில் 2009-ல் நடந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போருக்கு பிறகு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை காணவில்லை என புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச நெருக்குதல் காரணமாக, காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தை (ஓஎம்பி) அலுவலகத்தை இலங்கை அரசு தொடங்கியுள்ளது.
காணாமல் போனவர்கள் குறித்த புகார்களின் பேரில் விசாரணை நடத்துவது, இதற்கு காரணமானவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க பரிந்துரை செய்வது ஆகியவை ஓஎம்பி-யின் பணியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் உள்ளூர் பண்பலை வானொலிக்கு சிவாஜிலிங்கம் அளித்த பேட்டியில், “ஓஎம்பி அலுவலகத்தில் பிரபாகரன் பெயரை அளிக்க விரும்புகிறேன். அவரது சகோதரி அல்லது சகோதரர் விரும்பினால் அவர்கள் சார்பில் நான் முறையிட தயாராக உள்ளேன்” என்றார்.
இலங்கையில் 2009-ல் நடந்த உள்நாட்டுப் போரில் முல்லைத்தீவு மாவட்டம், முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை ராணுவத்தால் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தலையில் குண்டுபாய்ந்த காயத்துடன் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக ராணுவம் கூறியது.
என்றாலும் இதை தமிழ் தேசியவாதிகள் சிலர் ஏற்க மறுக்கின்றனர். இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் தப்பிச் சென்றதாகவே அவர்கள் நம்புகின்றனர்.