

போர் படிப்பினை, நல்லிணக்க ஆணையப் பரிந்துரைகளை தங்கள் விருப்பப்படியே செயல்படுத்துவோம் என்றும், வெளிநாடுகளின் அறிவுரையோ ஆலோசனையோ தேவையில்லை என்றும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.
தமிழர் பிரச்சினை தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, இலங்கை அரசு நிராகரித்தது.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், போர் படிப்பினை, நல்லிணக்க ஆணையம் அளித்த பரிந்துரைகளை இலங்கை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய ஐரோப்பிய எம்.பி.க்கள், இலங்கை உள்நாட்டுப் போரின்போது காணாமல் போனவர்கள் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வற்புறுத்தினர்.
இதுதொடர்பாக அந்த நாட்டின் தகவல் துறை அமைச்சர் கெகிலிய ரம்புக்வெலா, கொழும்பில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறும்போது, "அதிபர் மகிந்த ராஜபக்ஷேவால் நியமிக்கப்பட்ட போர் படிப்பினை, நல்லிணக்க ஆணையம் எங்கள் மக்கள், எங்கள் நாட்டை மட்டுமே சிந்தித்து பரிந்துரைகளை அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் வெளிநபர்கள் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது அவசியமற்றது.
ஆணையம் அளித்த சில பரிந்துரைகளை ஏற்கனவே அமல்படுத்தியுள்ளோம். இன்னும் சில பரிந்துரைகளை நிறைவேற்ற நீண்ட காலம் தேவைப்படுகிறது. முதல்கட்டமாக சில சட்டங்களில் முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது" என்றார் அவர்.