

ஏமன் நாட்டின் அப்யான் மாகாணத்தில் லோதர் என்ற இடத்தை கைப்பற்ற முன்னேறிய அல்குவைதா தீவிரவாதிகள் 13 பேரை அந்த ஊரின் வலுவான பழங்குடியினர் சனிக்கிழமையன்று சுட்டுக் கொன்றனர்.
முதலில் வீதி போராட்டங்களினால் பின்னடைவு கண்ட அல்குவைதா தீவிரவாதிகள் பிறகு இரவு நேரத்தில் நகருக்குள் நுழைந்தனர். அங்கிருக்கும் மக்கள் வசிக்கும் கட்டிடங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே இவர்கள் இலக்கு.
ஆனால் அங்கிருக்கும் ஆயுதந்தாங்கிய பழங்குடியினரிடமிருந்து அல்குவைதா தீவிரவாதிகள் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டனர். கடும் துப்பாக்கிச் சண்டையில் அல்குவைதா தீவிரவாதிகள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுமார் 2 மணி நேரம் நடந்த சண்டையில் அல்குவைதா போராட முடியாமல் தெறித்து ஓடிபின்வாங்கியது.
அப்யான் மாகாணத்தின் 3 ஊர்களில் லோதரும் ஒன்று, இதில் அல்குவைதா தீவிரவாதிகள் வியாழனன்று நுழைந்தனர். ஆனால் உள்ளூர் பழங்குடியினர் கடுமையாக எச்சரித்ததனால் 2 ஊர்களிலிருந்து அஞ்சி பின்வாங்கினர் அல்குவைதாவினர். ஆனால் லோதரைப் பிடித்து விடலாம் என்ற ஆசையில் நுழைந்தபோது ஆயுதந்தாங்கிய ஆக்ரோஷமான, சக்தி வாய்ந்த பழங்குடியினரின் எதிர்ப்புக்கு முன்னால் ஒன்றும் செய்ய முடியாமல் 13 பேரை இழந்து திரும்பி ஓடியது.
ஏமன் அரசியலில் இந்த சக்தி வாய்ந்த பழங்குடியினரின் பங்கு மிக மிக அதிகம். அரசுப் படைகளுக்கும் ஷியா போராளிகளுக்கும் மூண்ட சண்டையினால் ஏமனில் அல்குவைதா குளிர்காய்ந்து வந்தது.
இந்நிலையில் பழங்குடியினரின் அல்குவைதாவுக்கு எதிரான நீண்ட கால எதிர்ப்பை அல்குவைதா உடைக்க முனைந்தது, ஆனால் இம்முறையும் தோற்றுப் போனது.