

நாசாவின் ஜுனோ விண்கலம், வியாழன் கிரகத்தின் 3 நிலவுகளை முதல்முறையாக படம்பிடித்து பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனால் நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வியாழன் கிரகத்தை ஆராய் வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த 2011, ஆகஸ்டில் கேப்கனா வெரலில் இருந்து ஜுனோ விண்கலத்தை செலுத்தியது. இந்த விண்கலம் தொடர்ந்து 5 ஆண்டுகளாக பயணித்து, கடந்த 4-ம் தேதி வியாழனை அடைந்தது. அதில் இணைக்கப்பட்டிருந்த உயர் திறன் கொண்ட கேமரா மூலம் 43 லட்சம் கி.மீ தொலைவில் இருந்தபடி வியாழனை ஜுனோ படம்பிடித்துள்ளது.
அந்த படத்தில் வியாழன் கிரகத்தை சுற்றும் நான்கு நிலவுகளில், லோ, ஐரோப்பா மற்றும் கனிமெட் ஆகிய 3 நிலவுகளின் படமும், வியாழனின் மையத்தில் உள்ள சிவந்த புள்ளியும் தெளிவாக பதிவாகியுள்ளது.
வியாழனின் சுற்றுவட்டப் பாதையின் தூரம் குறைய, குறைய தொடர்ந்து படங்களை எடுக்கும் என்று ஜுனோ திட்ட ஆய்வாளர் கேண்டி ஹன்சென் தெரிவிக்கிறார். மேலும் அவர், அடுத்ததாக வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி வியாழனை மிக அருகில் நெருங்கியதும், அதன் முதல் உயர் திறன் படத்தை ஜுனோ படம்பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜுனோ பூமிக்கு அனுப்பி வைத்த படங்களை எல்லாம் இணையதளம் மூலம் பொது மக்களின் பார்வைக்கு வைக்கவும் நாசா குழு திட்டமிட்டுள்ளது.
வியாழனின் மேக உச்சியை நெருங்குவதற்காக ஜுனோ விண்கலம் தொடர்ந்து 37 முறை அதன் சுற்றுவட்ட பாதையை வட்ட மடித்து தூரத்தை குறைக்கும் என்றும், அப்போது வியாழனில் இருந்து 4,100 கி.மீ தொலைவில் ஜுனோ நிலை கொண்டிருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக் கின்றனர்.