

‘‘தீவிரவாத ஒழிப்பு, பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் ஆகிய வற்றில் முக்கிய கவனம் செலுத்தப் படும்’’ என்று ஐ.நா. தலைவர் பீட்டர் தாம்சன் உறுதிப்படுத்தினார்.
ஐ.நா. பொது சபையின் 71-வது கூட்டம் 13-ம் தேதி தொடங்கியது. ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, இந்தக் கூட்டத் தொடர் பான் கி மூனுக்கு கடைசி கூட்டத் தொடராக இருக்கும்.
இந்நிலையில், ஐ.நா. புதிய தலைவர் பீட்டர் தாம்சன் (பிஜி நாட்டை சேர்ந்தவர்) நேற்று கூறிய தாவது:
உலக நாடுகளின் நீடித்த மேம்பாட்டுக்குத் தேவையான நட வடிக்கைகளை அமல்படுத்துவது, உலகம் முழுவதும் அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாதத்தை ஒழிப்பது மற்றும் ஐ.நா. பாதுகாப்புக் கவுன் சிலை சீர்திருத்தி அமைப்பதற்கான நடவடிக்கைகளை அடுத்தகட்டத் துக்கு எடுத்துச் செல்வது போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத் தொடரில் விவாதிக் கப்படும்.
21-ம் நூற்றாண்டின் தேவையை கருத்தில் கொண்டு ஐ.நா. பாதுகாப்பு கவன்சிலை சீர்திருத்தி அமைக்க உறுப்பு நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்கம் செய்வது அவசியமா என்ற கேள்வியே இல்லை. விரிவாக்கத்தை எப்படி, எந்த முறையில் செய்வது என்பதுதான் இப்போதைய கேள்வி. இவ்வாறு பீட்டர் தாம்சன் கூறினார்.