

தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் பேச்சுவார்த்தையை புதுப்பிப்பது என்ற முடிவை எடுத்திருக்கிறது வடக்கு மாகாண சபை.
தடைபட்டு நின்றுவிட்ட பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் கிடையாது. முன் நிபந்தனைகளையும் விதிக்க மாட்டோம் என்று வடக்கு மாகாணத்தில் ஆட்சி புரியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் அதிபர் ராஜபக்சே இடையேயான நேரடி பேச்சுவார்த்தை 2011 பிப்ரவரியில் தொடங்கியது. வடக்கு மாகாணத்துக்கு அரசியல் சுயாட்சி அதிகாரம் கொடுப்பது பற்றி தீர்வு காண அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவை அதிபர் கூட்டியபோது இந்த பேச்சுவார்த்தை 2012 பிப்ரவரியில் திடீரென தடைபட்டு நின்றது .
இந்நிலையில், பேச்சுவார்த்தையை மீண்டும் புதுப்பிப்பது என்கிற முடிவுக்கு வந்தனர். புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள், குற்றங்களுக்கு பொறுப்பேற்பதிலும், சிறுபான்மைத் தமிழர்களை நல்லிணக்கப் பாதைக்குக் கொண்டு வருவதிலும் முன்னேற்றம் காணாமல் தாமதித்து வருவதாக இலங்கையைக் கண்டித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தீர்மானம் தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் பேச்சுவார்த்தை முடிவை வடக்கு மாகாண சபை எடுத்துள்ளது.