

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் செல்போனை அமெரிக்காவின் என்.எஸ்.ஏ., உளவு அமைப்பு ஒட்டுக் கேட்டது குறித்து அதிபர் ஒபாமாவுக்கு எதுவும் தெரியாது என்று என்.எஸ்.ஏ. செய்தித்தொடர்பாளர் வானி வின்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, "ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் செல்போன் உரையாடல்களை ஒட்டுக் கேட்பது பற்றி அதிபர் ஒபாமாவுடன் என்.எஸ்.ஏ. இயக்குநர் ஜெனரல் கெய்த் அலெக்ஸாண்டர் ஆலோசனை நடத்தியதாக வெளியான செய்தி தவறானது
இந்த விவகாரம் தொடர்பாக 'தி வால் ஸ்ட்ரீட்' பத்திரிகை வெளியிட்ட செய்தியில், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 35 நாடுகளின் தலைவர்களை என்.எஸ்.ஏ. உளவு பார்த்து வந்த தகவல் அதிபர் ஒபாமாவுக்கு தெரியாது.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே ஒன்றையொன்று உளவு பார்க்கக்கூடாது என்ற ரகசிய உடன்பாடு உள்ளது. அதன்படி அந்நாடுகள் நடந்து வருகின்றன. இந்த 4 நாடுகள் தவிர்த்த, பிற நாடுகளைத்தான் அமெரிக்கா உளவு பார்த்துள்ளதாகத் தெரிகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த உளவு பார்க்கும் விஷயம் குறித்து கடந்த ஏப்ரல் - மே மாதத்தில் தெரியவந்ததையடுத்து, உடனடியாக அதை நிறுத்துவதற்கு ஒபாமா உத்தரவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
என்.எஸ்.ஏ.வின் உளவு தொடர்பான தகவல்கள், அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்னோடென் ரகசிய ஆவணங்களை வெளியிட்டதைத் தொடர்ந்து உலகிற்குத் தெரியவந்தது. இதையடுத்து அமெரிக்க அரசுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் கெய்ட்லின் ஹேடன் கூறுகையில், “இன்றைய உலகில் ஏராளமான தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. எங்களின் குடிமக்கள் மற்றும் நட்பு நாடுகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டுதான் உளவுத் தகவல்களை சேகரித்து வருகிறோம். தேசிய பாதுகாப்பு, வெளிநாடுகள் தொடர்பான கொள்கைகளுக்கு உதவும் வகையில்தான் இந்த உளவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், நட்பு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்படும் உளவுப் பணிகள் குறித்து மறு ஆய்வு செய்யுமாறு ஒபாமா உத்தரவிட்டுள்ளார். அதற்கா மறு ஆய்வுக் குழு ஒன்றை அமைத்துள்ளோம். அக்குழு தனது பரிந்துரையை இந்த ஆண்டு இறுதிக்குள் அளிக்கும். எங்களின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளால் சிவில் உரிமைகளும், தனிமனித உரிமைகளும் பாதிப்புக்குள்ளாகிறதா என்பதை ஆராயவும் குழு ஒன்றை அமைத்துள்ளோம்" என்றார்.
பிற நாடுகளை உளவு பார்க்கும் செயலை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைக் ரோஜெர்ஸ், பீட்டர் கிங் ஆகியோர் நியாயப்படுத்தியுள்ளனர். குடிமக்களை பாதுகாக்க வேண்டுமானால், இதுபோன்ற உளவுத் தகவல்களை திரட்டுவது அவசியம், நாங்கள் திரட்டும் தகவல்களை நட்பு நாடுகளிடமும் பகிர்ந்து கொண்டுள்ளோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.