

உக்ரைன் நாட்டில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கி புறப்பட்ட விமானத்தை கடத்தப்போவதாக தெரிவித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ரஷ்யாவின், சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நேற்று துவங்கின. இந்நிலையில், உக்ரைனில் இருந்து புறப்பட்ட விமானத்தை கடத்தியிருப்பதாகவும் சோச்சி விமான நிலையத்திற்கு செல்லுமாறும் பயணி ஒருவர் விமானியிடம் கூறினார். இதனையடுத்து விமானி உடனடியாக விமானநிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அந்த விமானத்துடன் எப்-16 ரக போர் விமானம் ஒன்றும் பாதுகாப்புக்காக புறப்பட்டது.
இதற்கிடையில் விமான கடத்தல் குறித்து இஸ்தான்புல் ஆளுநர் கூறுகையில்: விமானத்தை கடத்துவதாக கூறிய இளைஞரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டதாக தெரிவித்தார்.அந்த இளைஞர் குடி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
விமானம் பயணிகளுடன் பத்திரமாக இஸ்தான்புல் நகரை வந்தடைந்தது.
சோச்சி ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக ஏற்கெனவே கூறப்பட்டதால் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.