

நேட்டோவுக்கு கூடுதல் நிதி அளிக்காவிட்டால் அந்தப் படைக்கு அளித்து வரும் ஆதரவைக் குறைப்போம் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேத்திஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க கூட்டுப்படை என்றழைக்கப்படும் நேட்டோவில் 28 உறுப்பு நாடுகள் உள்ளன. இந்தப் படைக்கு அமெரிக்கா கூடுதல் நிதி ஒதுக்கி வருகிறது. அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு நேட்டோ தொடர்பான கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நடந்த நேட்டோ பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேத்திஸ் பேசியதாவது:
நேட்டோவில் உறுப்பினராக உள்ள ஒவ்வொரு நாடும் தங்களின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் 2 சதவீதத்தை பாதுகாப்புக்காக ஒதுக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான நாடுகள் தங்களின் உறுதிமொழியை காப்பாற்றவில்லை. இனிமேல் நேட்டோவுக்கு கூடுதல் நிதி அளிக்காவிட்டால் அந்தப் படைக்கான ஆதரவை அமெரிக்கா குறைத்துக் கொள்ளும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், எஸ்தானியா, கிரீஸ், போலந்து ஆகிய நாடுகள் மட்டுமே நேட்டோவுக்கு அதிக நிதி அளித்து வருகின்றன.