

சர்வதேச நிதி அமைப்புகளை தக்க தருணத்தில் மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என ஐ.நா. பொதுக் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தையொட்டி, சர்வதேச நிதி முறைமை மற்றும் மேம்பாடு எனும் தலைப்பிலான கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இந்தியா சார்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமி பங்கேற்றார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஊக நிதி வரத்துகளை வரைமுறைப்படுத்துதல், சரியான பரிவர்த்தனை விகித மேலாண்மை, சமச்சீரற்ற தன்மை ஏற்படுவதைத் தடுத்தல், ஒத்துழைப்புக் கொள்கைகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
சர்வதேச நிதி அமைப்புகள் உரிய தருணத்தில் மறு சீரமைப்பு செய்யப்பட வேண்டும். சர்வதேச நிதிக்கட்டமைப்பு, பொருளாதார நிர்வாகம் ஆகியவற்றிலும் சீரமைப்புத் தேவை. வளரும் நாடுகளுக்கு உரிய பங்களிப்பைச் செலுத்தவும், சர்வதேச நிதியமைப்புகளின் உண்மையான நோக்கம் நிறைவேறவும் அவற்றைப் புனரமைக்க வேண்டும்.
உலக வர்த்தக அமைப்பின் தோஹா மேம்பாட்டு தீர்மானங்கள் விரைவில் முடிக்கப்பட வேண்டும். வளரும் நாடுகளில் வேளாண்துறைக்கு வழங்கப்படும் மானியம் தொடர்பான சிக்கல்கள் உள்ளிட்டவற்றுக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.
2015 ஆம் ஆண்டுக்குப் பின் வளர்ச்சி தொடர்பான இலக்குகளை எட்ட, உலகளாவிய ஒருங்கிணைந்த செயல்பாடு தேவை. இவ்வாறு அவர் பேசினார்.