ஜப்பான் மருத்துவமனையில் தீ விபத்து: 10 பேர் சாவு

ஜப்பான் மருத்துவமனையில் தீ விபத்து: 10 பேர் சாவு
Updated on
1 min read

ஜப்பானில் உள்ள ஒரு மருத்துவமனையில் வெள்ளிக் கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் தூங்கிக் கொண்டிருந்த 8 நோயாளிகள் உள்பட 10 பேர் இறந்தனர்.

இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறிய தாவது: புகுவோகா நகரில் உள்ள மருத்துவமனையின் தரை தளத்தில் அதிகாலை 2.20 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் அந்த கட்டிடத்தின் மேல் தளங்களுக்கும் புகை பரவி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து இரண்டரை மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த விபத்தில் 8 நோயாளிகளும் மருத்துவமனை இயக்குநர் மற்றும் அவரது மனைவி உள்பட 10 பேர் இறந்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் 70 முதல் 89 வயதுக்குள்பட்டவர்கள். மேலும் காயமடைந்த 5 பேரில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றார்.

தரைத்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டபோதும், மேல் தளங்களில் இருந்த நோயாளிகள் புகை காரணமாக மூச்சுத் திணறி உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

4 தளங்களைக் கொண்ட இந்த மருத்துவமனையில் 19 படுக்கை வசதிகள் உள்ளன. தரைத்தளத்தில் உள்ள சிகிச்சை அறையில் தெர்மல் தெரபி, நீர் சூடேற்றி ஆகிய சாதனங்கள் உள்ளன. எனவே, இந்த சாதனங்களில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in